Ads Header

Pages


09 April 2012

கீரைதோசை, கீரைசூப், கீரை புலாவ், கீரை இட்லி, கீரை பூரி சமையல் குறிப்புகள் !


ஹாய் இல்லத்தரசி'ஸ்... கீரை சாப்பிடுறது எந்த அளவுக்கு உடம்புக்கு யூஸ்ஃபுல்லானதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் `கீரை சாப்பிடுப்பா'ன்னு சொன்னதும் உங்க குழந்தைங்க `உவ்வே' சொல்லிட்டு ஓடுறாங்களா? இதோ... கீரை சிக்ஸ்டிஃபை, கீரைதோசை, கீரைசூப், கீரை புலாவ், கீரை இட்லி, கீரை பூரி, கீரை சப்பாத்தின்னு விதவிதமா சமைச்சுக் கொடுத்துப் பாருங்க... இனி அடம்பிடிக்கிற குழந்தைகள்கூட கீரைதான் வேணும்னு சமத்தா சாப்பிடப்போகுது...

கீரை 65

அரைக்கீரை- 1/2 கட்டு, க.பருப்பு-100 கிராம், உப்பு-தேவையான அளவு, பூண்டு-4 பல், வெங்காயம்-2 (பொடியாக நறுக்கியது), பச்சைமிளகாய்-3, சோம்பு -1/4 டீஸ்பூன், இஞ்சி- 1/2 டீஸ்பூன், பட்டை & லவங்கம்-2, எண்ணெய்-100 எம்.எல்.

செய்முறை: பருப்பை ஊறப் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும். இப்படி அரைக்கும் போதே இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், சோம்பு பட்டை லவங்கம் தனியே மிக்ஸியில் அரைத்து பருப்போடு போட்டு அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவோடு போட்டு கலந்து கொள்ளவும். பிறகு நன்றாக சுத்தம் செய்து நறுக்கிய கீரையை மாவோடு கலந்து, உப்பு சரிபார்த்து உருண்டைகளாக்கி குக்கரில் ஆவி கட்டி பரிமாறலாம் அல்லது எண்ணெய் சூடேற்றி பொரித்தும் எடுக்கலாம்.

கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரை-4 கட்டு, மஞ்சள்- 1/4 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, கோதுமை-250 கிராம், எண்ணெய்-1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1/4 டீஸ்பூன், அல்லது மிளகுத் தூள், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயக் கீரை இலைகளை மட்டும் எடுத்து உப்பு சேர்த்து கழுவிய பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி, மஞ்சள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் அல்லது மிளகுத் தூள் சேர்த்து வதக்கி, மாவோடு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். பிறகு சப்பாத்தி திரட்டி பிறகு மாவு சிறிது அளவு இரண்டு பக்கமும் தடவி டைரக்ட் தணலில் ஸ்டேண்ட் மேல் அல்லது கரண்டி கொண்டு சப்பாத்தியைச் சுட்டு எடுக்கலாம்.

கீரை தோசை

பொன்னாங்கண்ணிகீரை-1 கப், முருங்கைக் கீரை-1 கப், வெங்காயம் - 2, ப.மிளகாய்-2 (பேஸ்ட்), உப்பு-தேவையான அளவு, மஞ்சள்-1/4 டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன்.

செய்முறை :

கீரைகளைக் கழுவி கிளீன் செய்த பின், எண்ணெய் சூடேற்றி வெங்காயம் வதக்கி கீரை ப.மிளகாய் பேஸ்ட், உப்பு, மஞ்சள் சேர்த்து ரெகுலர் தோசை மாவோடு கலந்து, பின் தோசைக் கல்லில் தோசையை திக்காக ஊற்றி மூடி சுட்டு இரண்டு பக்கமும் திருப்பி எடுக்கவும். வேண்டுமானால் எண்ணெய் சிறிது சேர்க்கலாம்.

கீரை சூப்

மணத்தக்காளி கீரை-1 கட்டு, அரிசி-2 டீஸ்பூன், து.பருப்பு-2 டீஸ்பூன், உப்பு-தேவைக்கேற்ப, மஞ்சள் - 1/4 டீஸ்பூன், கா.மிளகாய்-1, மிளகு(முழு)- 1/4 டீஸ்பூன், பூண்டு-4 பல், வெங்காயம் -1/2 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பட்டை & லவங்கம் - 2, கார்ன்பிளவர் - 1 டீஸ்பூன், நெய்-1 டீஸ்பூன், மிளகுத்தூள்-தேவைக்கேற்ப.

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி, பிறகு மற்ற பொருள்கள் சேர்த்து குக்கரில் நன்றாக விசில் வரும் வரை வேக விடவும். வெந்தபின் மேலே வெந்த கீரையை ஆற விட்டு பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து சுமார் 4 தம்ளர் அல்லது 5 தம்ளர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி விந்ததும் மிளகுத் தூள், நெய் சேர்த்து பிறகு கார்ன் பிளவர் சிறிது ஆறின தண்ணீரில் கலந்து கொதிக்கும் சூப்பில் ஊற்றி கொதித்த பின் பரிமாறவும்.

கீரை புலாவ்

புதினா அல்லது சிறுகீரை-1 கட்டு, ப.மிளகாய்-4 (நீட்டாக கீத்தியது), உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள், - 1/4 டீஸ்பூன், பட்டை & லவங்கம் - 2, வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது, தக்காளி-1 பொடியாக நறுக்கியது, இஞ்சி, பூண்டு-2 டீஸ்பூன், அரிசி-11/2 ஆழாக்கு, எலுமிச்சை- 1/2, எண்ணெய்-2 டீஸ்பூன், முந்திரி-தேவைப்பட்டால்.

செய்முறை: எண்ணெய் சூடேற்றி, பட்டை லவங்கம், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பின் பச்சைமிளகாய் சேர்த்து, கீரை சேர்த்து வதக்கி பின் உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பின் அரிசி போட்டு 3 தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 3 சத்தம் வரும் வரை வேக விட்டு பின் எலுமிச்சை சாறு சேர்த்து, வறுத்த முந்திரியையும் சேர்த்து பின் பரிமாறவும்.

கீரை இட்லி

முளைக்கீரை-1 கட்டு, மிளகுத்தூள்-1/2டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, புளி-சிறிதளவு, மாங்காய் இஞ்சி- சிறிதளவு கரைத்து, அரைத்த விழுது) எண்ணெய்-1 டீஸ்பூன், இட்லிமாவு- அரை கிலோ, கடுகு-சிறிதளவு, கறிவேப்பிலை- சிறிதளவு.

செய்முறை : எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பின் முளைக் கீரை வதக்கி, உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள் போட்டு இஞ்சி, அரைத்த விழுதை மாவோடு சேர்த்து கலக்கி இட்லித் தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

கீரை பலாக் கோப்தா
கீரை கிரேவி

பாலாக் கீரை - 1 கட்டு, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள்,-ரு டீஸ்பூன், மிளகு-1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு-1/2 டீஸ்பூன், வெங்காயம்-1, எண்ணெய்-1 டீஸ்பூன், கரம்மசாலா-1 டீஸ்பூன்.

செய்முறை : கீரை, உப்பு, மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை வேக விட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். பிறகு எண்ணெய் விட்டு கரம்மசாலா போட்டு தாளித்து அரைத்த விழுதை ஊற்றி கொதி விடவும். இப்பொழுது கிரேவி ரெடி.

கோப்தா

வெந்தயக்கீரை-1 கட்டு, கார்ன்பிளவர்-1 டேபிள்ஸ்பூன், உப்பு-தேவைக்கேற்ப, கரம்மசாலா-1 டீஸ்பூன், கடலைமாவு-4 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, எண்ணெய்-100 எம்.எல். (பொரிக்க) எலுமிச்சை-சில துளிகள்.

செய்முறை: வெந்தயக் கீரையை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், கடலை மாவு, உப்பு தண்ணீர் தெளித்து, எலுமிச்சை சாறு சேர்த்து உருண்டைகளாக்கி ஸ்டீம் குக் செய்தோ அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்தோ கிரேவி போட்டு ஊறவிட்டு பரிமாறவும்.

கீரை பூரி

முருங்கைக்கீரை-1 கப், மைதா - 2 கப், உப்பு -தேவைக்கேற்ப, உருளை-1, வெங்காயம்-1, பொடியாக நறுக்கியது, பச்சைமிளகாய்-2, சாட்மசாலா-1/4 டேபிள்ஸ்பூன், வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு-1/2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை : கீரை ப.மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு வெண்ணெயில் வெங்காயம் வதக்கி அதனுடன் இஞ்சி, பூண்டு அரைத்த விழுதைச் சேர்த்து, சாட் மசாலா, அரைக் கீரையைச் சேர்த்து வதக்கி மாவோடு போட்டு பூரி மாவு பதம் கலந்து பூரி இட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும். அல்லது மைக்ரோவ் ஓவன் வைத்து பேக் செய்யவும்.

பொடி

கறிவேப்பிலை-(காய்ந்தது) 250 கிராம், உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு-100 கிராம், கொப்பரைத் தேங்காய்-50 கிராம், காய்ந்த மிளகாய்-25 கிராம், பெருங்காயம்-10 கிராம், சுக்கு-சிறிதளவு, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்.

செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ளவற்றை வெறும் கடாயில் தனித் தனியாக வறுத்து தனித்தனியே அரைத்தபின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேண்டிய டப்பாவில்போட்டு மூடி வைத்து தேவைப்படும் போது எடுத்து நெய் ஊற்றி சாதத்தோடு சாப்பிடலாம். அல்லது புளி தண்ணீர் சேர்த்து கறிவேப்பிலை குழம்பு வைக்கலாம். அல்லது காலையில் 1 டீஸ்பூன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரைமுடியைத் தவிர்க்கலாம்.

கீரை சாட் கப்ஸ்

வல்லாரைக் கீரை அல்லது ஏதாவது ஒரு கீரை-1 கப், உருளைக் கிழங்கு-2, இஞ்சி பூண்டு-1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், நெல்லிக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கொத்தமல்லி- சிறிதளவு, கரம் மசாலா- 1/4 டீஸ்பூன், பச்சைமிளகாய்-4 அரைத்தது. மைதா-1 கப், எண்ணெய்-பொரிக்கத் தக்க.

செய்முறை : கீரையைக் கழுவி ஒரு வேக்காடு போட்டு, உருளைக் கிழங்கு (வேகவைத்து மசித்ததை) சேர்த்து உப்பு, மஞ்சள், நெல்லிக்காய் பொடி, பச்சைமிளகாய் விழுதை கரம் மசாலா, கொத்தமல்லி, மைதாவோடு சேர்த்துப் பிசைந்து லு மணி நேரம் ஊற விட்டு பிறகு திரட்டி, சிறிய கப் மேல் எண்ணெய் தடவி அதன் மேல் ரோல் செய்ததை கவர் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க கப் தனியே வந்து விடும். மாவை பொடி எடுக்க சாஸ் கொண்டு சாப்பிடலாம். பெரியவர்களாக இருந்தால் ஆவியில் வேக்காடு போட்டு கீரை விழுதையே நிரப்பி சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner