Ads Header

Pages


17 April 2012

மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றிவிடலாம்.

ஹைவே டிபார்ட்மென்ட்டோ அல்லது அரசுத் துறையோ ‘இது புறம்போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போகலாம். இதே போன்ற பிரச்னைகள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும்.

ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்...

‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட்வான்ஸாக பத்தாயிரம் கொடுத்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஃபைனான்ஸ் கம்பெனியில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதாகப் பேசினோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி.புத்தகம் தரவில்லை. பல முறை கேட்டுப் பார்த்தும் பயனில்லை. ‘பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல கண்டிஷனில் உள்ள பைக் கிடைத்திருக்கிறதே’ என்று நானும் ஆர்.சி.புத்தகம் கேட்பதையே விட்டுவிட்டேன்’’ என்றார்.

‘‘ஆர்.சி.புத்தகத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு ஏதாவது விபத்து போன்ற பிரச்னைகள் வந்தால் ரொம்ப ரிஸ்க்காகிவிடும்’’ என்று நான் சொன்னதும், ‘‘பேலன்ஸ் 8 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு ஆர்.சி.புத்தகத்தை வாங்கி


வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றவர், ஒரு வாரம் கழித்து திரும்ப வந்து, ‘‘சார் என் பைக்கை இரண்டு நாளைக்கு முன்னாடி போலீஸ் வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்க... அது திருட்டு பைக்காம். எனக்கு பைக் விற்றவன் 20 வண்டிகளுக்கு மேல திருடியதாச் சொன்னாங்க... இப்ப அந்த பத்தாயிரம் ரூபாயை திரும்ப வாங்குவது எப்படி?’’ என்றார்.

‘‘நீங்க கவனக்குறைவா இருந்ததற்கு இந்தப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று நினைத்து விட்டு விடுங்கள். இதைத் தெரிந்தோ தெரியாமலோ வாங்கியதற்கே உங்கள் மீது திருட்டுப் பொருளைப் பெற்றதாக வழக்குப்போடலாம். அட்லீஸ்ட், அந்த வழக்கிலிருந்து தப்பித்தோம் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னேன். இந்தச் சம்பவம் பைக்குக்கு மட்டும் அல்ல, எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்!

நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?

ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்க-வில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்!


பதிவை மறுக்க முடியுமா?

ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!


வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்...

ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner