Ads Header

Pages


27 April 2012

எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்? - உங்களுக்கு உதவும் சட்டங்கள்!


நாம் ஒரு பொருளை வாங்கி, அது சரியில்லாவிட்டால் ‘கன்ஸ்யூமர் கோர்ட்டு’க்குப் போகலாம். சொத்துத் தகராறு என்றால் ‘உரிமையியல் நீதிமன்றங்கள்’ என்கிற சிவில் கோர்ட்டுக்குப் போகலாம். திருட்டு, அடிதடி போன்ற குற்றங்கள் என்றால் ‘குற்றவியல் நீதிமன்றங்களை’ நாடலாம்.

இதெல்லாம் சரி... அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது?

இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது ‘ரிட் மனு’.

அதென்ன ரிட்?

‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம். உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம். அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்புதான்.

எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம். முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹைகோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதாரணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ்பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷபணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்யலாம்.

அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பதற்காகப் போடப்படுவது இது.

அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்டமாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner