Ads Header

Pages


26 April 2012

நபிகள் நாயத்தின் பொன் மொழிகள்!

நபிகள் நாயகம் பேசுகிறார்

கி.பி.632 மார்ச் 6ல் (துல்ஹஜ் மாதம் 9) நபிகள் நாயகம் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவு எம்மாதத்துக்கும் எக்காலத்துக்கும் உரியதாகும். அவரது பேச்சைக் கேளுங்கள்.

மக்களே! நான் கூறுபவற்றைக் கவனத்துடன் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை எதுவும் கிடையாது. ஆட்சி அனைத்தும் அவனுக்கே உரியது. அனைத்துப் புகழுக்கும் உரியவன் அவனேயாம். உயிர் அளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் அவனாகவே இருக்கிறான். அவன் சர்வ வல்லமை பொருந்தியவன். அவன் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். தன் அடிமையாகிய எனக்கு உதவி புரிந்தான். இனி நீங்களும், நானும் இங்கே ஒன்று கூடுவோமா என்பதை நான் அறியமாட்டேன்.

மனிதர்களே! இந்த மாதமும், இந்த நாளும், இந்த நகரமும் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றனவோ, அவ்வாறே உங்களின் உயிர்களும், உடமைகளும், கவுரவமும் புனிதமாகவும், பாதுகாப்புடனும் இருந்து வரச்செய்வது உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அவ்வாறே எக்காலத்தும் இருந்து வர இறைவன் அருள்பாலிப்பானாக!

நீங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்களில் அவன் உங்களின் செயல்களைப் பற்றி உங்களிடம் கணக்கு கேட்பான். ஆகவே சொத்துரிமை உடைய ஒருவனுக்கு அவனது உரிமைக்கும் அதிகமாக சாசனம் செய்து வைத்தல் கூடாது. அமானிதப் பொருள்கள் (பிறர் பொருள்) வைத்திருந்தால் அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுங்கள்.

கடனாகப் பெற்றதை திருப்பிக் கொடுத்து விட வேண்டும். வாக்குறுதி கொடுத்து பொறுப்பேற்றவன் தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒருவர் மற்றவரின் சொத்தை கபளீகரம் செய்யக்கூடாது.

இனிமேல் எவரும் எந்த வகையாகவும் வட்டி வாங்கக்கூடாது. அசலை மட்டுமே செலுத்த நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

கொலைக்கு பழிவாங்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. குற்றம் செய்தவனே அக்குற்றத்திற்கு பொறுப்பாளி. தந்தையின் குற்றத்திற்கு தனயனும், தனயனின் குற்றத்திற்கு தந்தையும் பொறுப்பாளி அல்ல.

நீங்கள் தவறு செய்யாதீர்கள். பிறர் உங்களுக்கு அநீதி இழைக்கமாட்டார்கள்.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். உங்கள் எல்லாரின் உரிமைகளும் ஒரே விதமானவையே. இதில் பாகுபாடு, ஏற்ற வித்தியாசம் எதுவுமே கிடையாது. மக்களே! செயல்களில் தூய்மையான எண்ணத்தையும், ஜமாஅத் என்னும் சமுதாய ஒற்றுமையையும் உங்களின் நோக்கமாகக் கொள்ளுங்கள்.

இவை உங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி வலிவும் பொலிவும் பெற்றவர்களாக விளங்கச்செய்யும்.
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு சில உரிமைகள் இருப்பது போல், உங்கள் மீதும் அவர்களுக்கு சில உரிமைகள் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பெற்ற இறைவனின் அமானிதத்திற்கு ஒப்பானவர்கள். அவர்களைப் பேணிக்காத்து திரும்ப ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும். அவர்களுக்கு உணவு. உடை கொடுத்து ஆதரியுங்கள்.

கற்புநெறி தவறுபவர்களைக் கண்டியுங்கள். தண்டியுங்கள். அவர்கள் மீது அன்போடு கூடிய அதிகாரத்தை பிரயோகியுங்கள். தேவையில்லாமல் தலாக் (விவாகரத்து) செய்வது அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!

உங்களுக்கு யாராவது ஒரு பொருள் தந்தால், மறக்காமல் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மனதில் அவரை நன்றியோடு நினையுங்கள். செய்ந்நன்றியை மறக்கவே கூடாது.

நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைக் கேட்டால், "நன்றி' என்ற சொல்லுக்கு இருக்கும் மகத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஒருமுறை நாயகம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார். அவ்வீட்டில் ஒரு குவளை தண்ணீர் வாங்கி குடித்தார். குடித்து முடித்ததும், ""இப்போது நான் பருகிய தண்ணீருக்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இதனைக் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான்,'' என்றார். இதில் இரண்டு முக்கிய கருத்துகள் ஒளிந்து கிடக்கின்றன.
உலகில் தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் எதுவுமே இல்லை.
மயக்கமடைந்து கிடக்கும் ஒருவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். அவன் உடனே கண்விழித்து விடுகிறான். அவனுக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவன் சுதாரித்துக் கொண்டு எழுந்தே விடுகிறான்.
இது தண்ணீரை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இதே தண்ணீரை சிலர் அற்பமாக பார்க்கின்றனர். அவர்களுக்கும் நாயகம் ஒரு கருத்தை சொல்கிறார். ""சாதாரண தண்ணீரைத் தானே இறைவன் கொடுத்தார்.

இது என்ன பெரிய விஷயம்! நமக்கென்ன பொன்னையும், பொருளையுமா அள்ளிக் கொடுத்தார்,'' என்றும் எண்ணக்கூடாது. கடவுள் நமக்கு அற்பமான பொருளைக் கொடுத்தாலும் கூட காரணத்தோடு தான் கொடுப்பார்.

நமக்கு இறைவன் துன்பத்தையே தந்தால் கூட, ""இந்த துன்பத்தை தந்ததன் மூலம், எனக்கு வாழ்க்கையில் அனுபவப்பாடத்தை கற்றுத் தந்த இறைவா, உனக்கு நன்றி,
இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்ததன் மூலம் என் பாவங்களை குறைத்ததற்காக நன்றி,'' என்றே சொல்ல வேண்டும்.

பணத்தின் மீது மட்டும்தான் பற்றா?:

இந்த உலகம் பணத்தின் மீது மட்டும் தான் பாசம் வைத்திருக்கிறது.
பணத்தின் மீது பாசம் வைப்பது இவ்வுலகைப் பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த பணத்தாசை ஒருவனை நரகத்தில் தள்ளிவிடும்.

நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது,

""மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியை போன்ற நிலையில் இருப்பான்.
பிறகு இறைவன் புறத்தில் இருந்து, "நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எவ்வாறு செயல்புரிந்தாய்?'என்று கேள்வி கேட்கப்படும். அதற்கு அவன், "இறைவா! நான் செல் வத்தை அதிகமாக திரட்டி, அதனைப் பன் மடங்காகப் பெருக்கி, அதை உலகத்திலேயே விட்டு வந்துவிட் டேன். என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பினால், அவை அனைத்தையும் என்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்' என்று கூறுவான்.

"சரி...நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக்காட்டு,'' என்று அடுத்தகேள்வி கேட்கப்படும். அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இவ்வாறு சொல்பவன் நரகத்தில் தள்ளப்படுவான்,'' என்கிறார்.

இதன் பொருள் என்ன?

பூமியில் வாழும் போது, இறைவனின் கேள்விக்கு வெறும் பணத்தை மட்டும் சேர்த்தேன் என்று சொல்லும் மனிதன், நீ சொர்க்கத்தில் வாழ்வதற்காக இங்கே என்ன அனுப்பி வைத்தாய் எனக்கேட்டால், அப்போதும் பணத்தைப் பற்றியே பேசுகிறான்.

பணத்தை தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. சொர்க்கத்தில் வாழ வேண்டுமானால், பூமியில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணத்தையும், பிற வசதிகளையும் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும்.

யாருக்காவது ஒருவேளை உணவு, ஒரு ஏழை மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகம், ரமலான் நோன்பின் போது, இஸ்லாம்அறிவுறுத்தியபடி, ஒரு டம்ளர் தண்ணீராவது பிறருக்கு தானமாகக் கொடுத்திருக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் போனால், அவன் நரகத்தில் தள்ளப்படுவான்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner