Ads Header

Pages


22 April 2012

தயிர் வாழைக்காய் -- கிரீன் கீர் -- செண்பகப் பூ ஸ்வீட் - வாசகிகள் கைமணம்!


தயிர் வாழைக்காய்


தேவையானவை: வாழைக்காய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தயிர் - ஒன்றரை கப், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், மீதமுள்ள சீரகம், கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.

பிறகு இதில் அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு, தோல் சீவி நறுக்கிய வாழைக்காயைப் போடவும். காய் வெந்ததும், தயிரைக் கடைந்து சேர்க்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் கலந்து, பெருங் காயத்தூள் சேர்த்துக் கிளறினால் தயிர் வாழைக்காய் தயார்!

இதை சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.. பருப்பு சாதம், சப்பாத்தி மற்றும் டிபன் வகைகளுக்கு 'சைட் டிஷ்' ஆகவும் தொட்டுக் கொள்ளலாம்.

தயிர் வாழைக்காய்: கொஞ்சம் தண்ணீர் அதிகமாகி விட்டால், கடலைமாவை கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இறக்கலாம்.

--------------------------------------------------------------------------------

கிரீன் கீர்


தேவையானவை: பாசிப்பயறு - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காயின் இரண்டு மற்றும் மூன்றாம் பால் - 2 கப், பொடித்த வெல்லம் - 2 கப், சர்க்கரை - ஒரு கப், முந்திரி, திராட்சை - தேவையான அளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை கலர் - சிறிதளவு, காய்ச்சிய பால் - ஒரு கப்.

செய்முறை: நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். பாசிப்பயறை சுத்தம் செய்து இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி குக்கரில் குழைய வேக விடவும். கெட்டி தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், வெல்லம், சர்க்கரை, பச்சை கலர் இவற்றை வெந்த பயறுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சையை இதில் போட்டு, ஆறியதும் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து பரிமாறவும்.

கிரீன் கீர்: சிறிது பாதாம், முந்திரி, பிஸ்தா அரைத்துச் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------

செண்பகப் பூ ஸ்வீட்


தேவையானவை: மைதா மாவு - இரண்டரை கப், நெய் - கால் கப், சர்க்கரை - 3 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: நெய்யை உருக்கி, மைதா மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை ஊற்றி கெட்டியாக பிசையவும். சர்க்கரையை பாதுஷா பாகு பதத்தில் காய்ச்சி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இடவும். அப்பளத்தின் நடுவில் கத்தியால் இரண்டு, மூன்று கீறல்களைப் போடவும். அப்பளத்தை பாய் போல் சுருட்டி இரு ஓரங்களையும் ஒட்டி விடவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்து, பாகில் தோய்த்து எடுக்கவும்.

செண்பகப் பூ ஸ்வீட்: பார்ப்பதற்கு செண்பகப் பூவைப் போலவே இருப்பதால் இந்தப் பெயர். பால் விடும்போது ஒரு டீஸ்பூன் தயிரையும் சேர்த்துச் செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner