Ads Header

Pages


26 April 2012

வாழ்க்கையில் உங்களுக்கு அழகாகத் தெரிய ஆசை தானே?

அடிக்கடி மாறி கொண்டே இருப்பது நல்லதல்ல என்று தோன்றுகிறதா?

பள்ளிக் கூட வயதில் இரட்டை ஜடை, கல்லூரி செல்லும்போது ஒற்றை ஜடை, போனி டெய்ல், திருமணமானபின் "கம்பல்சரி'யாய் ஒற்றை ஜடை என்று "ரொட்டீன்' வாழ்க்கை வாழ்வது பிடிக்கிறதா அல்லது மாற்றங்கள் செய்து கொள்ள ஆசையா?

வெகு நீளமான தலைமுடியை குட்டையாய் வெட்டி அலங்கோலம் செய்து கொள்வது இப்போது நாகரிகமாகி விட்டது. குட்டை முடியை நீளமாக, அடர்த்தியாக வளர்த்துக் கொள்ள படாதபாடு படுபவர்களிடம் சென்று கேளுங்கள், உங்கள் கூந்தலைப் பற்றி. நீளமான முடி இருப்பவர்கள் ஒற்றை ஜடையை நுனி வரை போட்டு அழகை வெளிக்காட்ட முடியாமல் திணறுவதை விட, நீள முடிக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள நிறைய டிசைன் அலங்காரங்களைப் போட்டுக் கொள்ளலாம்.

இத்தனை கதை எதற்குத் தெரியுமா? மாறுங்கள்... கால மாற்றத்துக்கு ஏற்றார்போல மாறலாம். ஆனால் "ஒரிஜினாலிட்டி'யை இழக்க வேண்டாம் என்பதற்காகத் தான் இந்த கதை.

புத்தாண்டு துவங்கப் போகிறது. புதுப்பொலிவு வேண்டாமா ? முன்பை விட இன்னும் அழகாகத் தெரிய ஆசை தானே?

உங்களுக்கு 20 வயதானால் என்ன, 50 வயதானால் என்ன, 80 வயது ஆகிவிட்டால் தான் என்ன? அழகாகத் தோன்றுவதற்கு வயது ஒரு தடையா என்ன? இந்திய முன்னாள் அழகி நபீசா அலியைப் பாருங்கள்.

தலைமுடி முழுதும் நரைத்து விட்டது. ஆனால், கண்ணுக்கு மையுடன் சில நேரங்களில், மை இல்லாமல் சில நேரங்களில், புருவத்தை நேர்த்தி செய்து, அழகான புன்சிரிப்புடன், கண்ணை உறுத்தாத முத்து மாலையுடன், நகை விளம்பரத்திற்கு "போஸ்' கொடுத்து அசத்துகிறார். நீங்கள் எப்போது மாறப் போகிறீர்கள்?

அரசு அலுவலகங்களில் பணி செய்யும் பெண் ஊழியர்களில் பலர் தங்கள் உடையில், ஒப்பனையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர்; சிலர் "அதீத' கவனம் செலுத்தி, ஒவ்வாத நிறங்களில் புடவைகளை, நகைகளைப் போட்டு "அசத்தி' விடுகின்றனர். பொறுத்தமாய், கச்சிதமாய் உடை உடுத்தினாலே, தினசரி வேலைகளை சுறுசுறுப்பாய் செய்வோம் என்பது பெண்களுக்கே உரிய இயல்பு.

அழகுபடுத்திக் கொள்ள விதவிதமாய் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. தரமான, நம்பகமான பொருட்களை வாங்குங்கள். ஒரே ஒரு முறை பயன்படுத்தியவுடன் "பல்லிளித்து'ப் போகும் பொருட்களை வாங்க வேண்டாம். அளவுக்கு அதிகமான "மேக்அப்'பும், அணிகலன்களும் வேண்டாம்.

முதன்முறையாக "பியூட்டி பார்லருக்கு' செல்லும்போது, உங்களுக்கு எது நன்றாக இருக்குமோ அது குறித்த விளக்கம் கிடைக்காது. "பிசினஸ்' பார்ப்பதில் தான் கவனம் செலுத்துவர். உங்களுக்கு எது நல்லது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்தி நடிகை ரேகாவைத் தெரியுமா? அவருக்கு "மேக்அப்' போட யாரையும் அதிகம் வைத்துக் கொள்வதில்லை. அவரே தான் போட்டுக் கொள்கிறார். 50 வயதானாலும் எவ்வளவு அழகாக உள்ளார் அவர்... "நிறைய பணம் கொட்டுது... அதனால் செலவழிக்கிறார்... எங்களிடம் பணம் ஏது?' என்று சொல்வதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே அழகை மிளிறச் செய்வது உங்கள் கையில் உள்ளதே... அதை மறந்து விட வேண்டாம்.

நல்லெண்ணையை அல்லது தேங்காய் எண்ணெயை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறி, உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

வியர்வை நாற்றம் ஏற்படும் என்று பயந்தால், மிதமான ரசாயனம் கலந்த சோப்பைத் தேய்த்துக் குளிக்கலாம். தலைக்கு கண்டிப்பாய் ஷாம்பூவைத் தவிர்த்து விட வேண்டும். சிகைக்காய் பொடி தான் "பெஸ்ட்!' அதன் பிறகு, கஸ்தூரி மஞ்சள் பொடியை முகம் முதல் கால் வரை தேய்த்துக் கழுவுங்கள். தினசரி குளியலுக்கு மஞ்சள் பொடி மிகவும் நல்லது.

நாற்பது வயதைத் தாண்டியவர்கள் முகத்தில், பல கவலைகளால் ஏற்பட்ட கண் கரு வளையம், மூக்கு மற்றும் கன்னங்களில் கரும்படலம் காணப்படும். இதற்கு முகத்தில் பாலாடையைத் தடவி அரை மணி நேரம் ஊறி, பயத்தம் மாவு தேய்த்து பிறகு, கஸ்தூரி மஞ்சள் பொடியையும் தேய்த்துக் குளித்தால் கரு வளையமும் நீங்கும், கரும்படலமும் மறையும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வறண்ட சருமத்தைத் துளிக் கூட காண முடியாது. எண்ணெய் தேய்க்காமல் போகும்போது தான் வறண்ட சருமமே பிரச்னை கொடுக்கிறது. இதற்கென கடைகளில் "மாய்சரைசர்' கிரீம்கள் உள்ளன. எண்ணெய் பசை கொண்ட சருமம், வறண்ட சருமம் என பலவகையான சருமங்களுக்கு ஏற்ற வகையில் தனித் தனி "கிரீம்'கள் கிடைக்கின்றன. இவற்றை தினமும் மறக்காமல் பூசிக் கொள்ள வேண்டும்.

"இந்த மேனாமினுக்கி சமாச்சாரமெல்லாம் வேண்டாம்...' என்று, அங்கலாய்ப்பவர்களும் உள்ளனர். இவர்கள் தோற்றத்தை "ரீமேக்' செய்து காண்பித்தால், இவர்களுக்கும் வாழ்க்கையில் ஆசை ஏற்படும்.

பெரும்பாலான குடும்பங்களில், தங்களுடன் அம்மாக்கள் வெளியில் வரும்போது "நீட்'டாக வர வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றனர்.
குழந்தைகள் அம்மாக்களுக்கு "மேக்அப்' போட்டுப் பார்க்கும் காட்சிகளையும் பல குடும்பங்களில் காணலாம். ஆனால், ஒரு விஷயத்தில் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே எண்ணம்... அது என்ன தெரியுமா?

அம்மாக்கள் இடுப்பை, வயிற்றை வெளியில் காட்டக் கூடாது என்பது தான். குழந்தைகளுக்கு நல்ல உடை உடுத்தும் உணர்வு நிறைய உள்ளது என்று திருப்திப்பட்டுக் கொள்ளும் அம்மாக்கள் பலரும், அவர்கள் சொல்வதை பின்பற்றுவதில்லை என்பது வேறு விஷயம். இதற்குக் காரணம், கட்டும் புடவை எந்த விதத்தில் இருக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தேர்வு செய்யத் தெரியாமல் இருப்பது தான்.

நிறத்தைப் பார்த்து புடவை வாங்குவதை விட, உங்களுக்குப் பொருந்துமா என்று பார்த்து வாங்குவது தானே நல்லது!

தினமும் இரண்டு வேளை குளிப்பதைக் கூட பலராலும் பின்பற்ற முடியவில்லை. தண்ணீர் பிரச்னை, துணி துவைப்பதில் பிரச்னை, நேரமின்மை, அலுவலகப் பணி நேரத்தால் இடையூறு என்று பல காரணங்கள் உள்ளன.

இரவு சாப்பிடும் முன், வாசனை சோப்பு தேய்த்து சுத்தமாகக் குளித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

வேகமாகச் சாப்பிடுவீர்கள். சாப்பிட்டதும், மெதுவாய் 10 நிமிடம் உலவி விட்டு, வீட்டு விஷயங்களை அலசிவிட்டு, "போன்' பேச்சுக்களை முடித்துக் கொண்டு, வாசனையுடன் சுகமாகத் துõங்கலாம். இருக்கும் 24 மணி நேரத்தில், அவசர வேலைகளுக்கும் நடுவே, நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்வதில் ஆனந்தம் காண்பது நல்லது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner