Ads Header

Pages


30 April 2012

ஏலக்காயின் மருத்துவப் பயன்கள் - டிப்ஸ்கள் !

சமையல் வகைகளுக்கு, குறிப்பாக இனிப்புப் பண்டங்கள், பலகாரங்கள், கேக், மிட்டாய், ரொட்டிகளுக்கு சுவையும், மணமும் அளிக்கும் ‘‘ஏலக்காய்’’, பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில், ‘‘ஏலக்காய் மாலைகொண்டு ஏழு காதம் தொலைவிலிருந்து தாய்மாமன் வருவானே தங்கமே கண்ணுறங்கு’’ என்னும் தாலாட்டுப் பாடல் ஒன்று, ஏலக்காயின் பழமையை உணர்த்துகிறது. பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை பண்டைத் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தன என்பர்.

பல்மொழிப்பெயர்கள்: ஏலக்காய்க்கு ஆங்கிலத்தில், (Cardamom) என்று பெயர். சமஸ்கிருதத்தில் கபிதா, இந்தியில் ஏலாச்சி, கன்னடத்தில் ஏரகி, தெலுங்கில் ஏலகி செட்டு, மலையாளத்தில் ஏலக்கா, வங்காளத்தில் எலைச்சி, குஜராத்தியில் எலாச்சி, மராத்தியில் வெல்சி, அசாமியில் முகா, ஒரியாவில் அலைச்சா என்று பெயர்.

சத்துப்பொருட்கள்: ஏலக்காய் விதையில் Seads,, புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி அடங்கியுள்ளன.

பொதுப்பயன்கள்: பசி தூண்டி, கபம் இளக்கி, பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. சிறுநீர் பெருக்கி, மூத்திர அடைப்பு, குடற்பாதைக் கோளாறுகளை நீக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். வலி நிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும்.

மருத்துவப் பயன்கள் :

சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

எலுமிச்சைச் சாறுடன், ஏலக்காய் பொடித்திட்டு சாப்பிட்டால் சாதாரண பித்தம் விலகும்.

ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய்ய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

ஏலக்காய், சதகுப்பை, பெருங்காயம் இவற்றுடன் சிறிது நீர்தெளித்து மைய்யாக அரைத்து, தசை வீக்கம் மீது பூசி வர, வீக்கம் வற்றி நலம் பயக்கும்.

வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner