Ads Header

Pages


22 April 2012

தக்காளி சால்னா--பயிறு குழம்பு-- கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு-- வெங்காயச் சாறு - சமையல் குறிப்புகள் !


தக்காளி சால்னா

தேவையான பொருள்கள் :
தக்காளி - 5,
கேரட் (நறுக்கியது) - 1/2 கப்,
பீன்ஸ் (நறுக்கியது) - 1/2 கப்,
தேங்காய் எண்ணெய் - 20 மில்லி,
தேங்காய் - 1 கப்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 10 கிராம்,
கசகசா - 5 கிராம்,
அன்னாசிப்பூ - 2 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
முந்திரி (அரைத்தது) - 1 கப்,
சோம்பு - 5 கிராம்,
சீரகம் - 5 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது,
வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்,
உருளைக் கிழங்கு - 1/2 கப்.

செய்முறை :

கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கையும் வெட்டிக் கொள்ளவும்.

தேங்காய், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, பச்சை மிளகாய், கசகசா இவையனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், முந்திரியை ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்பு, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் வெட்டிய காய்கறிகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வறுத்துப் பொடியாக்கிய தனியா மற்றும் முந்திரிபேஸ்ட் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கினால் தக்காளி சால்னா தயார்.
==================================================================
பயிறு குழம்பு

தேவையான பொருள்கள் :

காராமணி பயிறு - 1 கப்,
பச்சைப் பயிறு - 1 கப், தக்காளி - 2,
இஞ்சி (சிறிதாக நறுக்கியது) - 5 கிராம்,
பூண்டு (சிறிதாக நறுக்கியது) - 5 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
கடுகு, உளுந்து - தாளிக்க,
தேங்காய் (சிறிதாக நறுக்கியது) - 1 கப்,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பச்சரிசி (அரைத்தது) - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
மிளகாய்த் தூள் -10 கிராம்,
தனியா - 20 கிராம்,
நல்லெண்ணெய் - 25 மில்லி

செய்முறை :

காராமணி மற்றும் பச்சைப் பயிறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுந்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த பயிறுகளை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வறுத்து அரைத்த தனியா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

நைசாக அரைத்த பச்சரிசியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க
விடவும். இறுதியில், உப்பு சரிபார்த்து இறக்கினால் பயிறு குழம்பு ரெடி!.

==============================================================

கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு

தேவையான பொருள்கள் :
கறிவேப்பிலை - 2 கப்,
சின்ன வெங்காயம் - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - 5 கிராம், பூண்டு - 5 கிராம்,
சோம்பு - சிறிது,
நல்லெண்ணெய் - 25 மில்லி,
கடுகு - சிறிது,
முந்திரி - 20 கிராம்,
வெந்தயம் - 5 கிராம்,
தக்காளி (அரைத்தது) - 1 கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
புளித் தண்ணீர் - 1 கப்,
தனியா - 10 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம், கடுகு, முந்திரி இவையனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும். அதைச் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியபின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் வறுத்து அரைத்து வைத்த மல்லியையும் சேர்த்து வதக்கவும்.

புளித் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

பிறகு, அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க வைக்கவும்.

இறுதியில், உப்பு சேர்த்து இறக்கினால், கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு ரெடி.
=========================================================
வெங்காயச் சாறு

தேவையான பொருள்கள் :
தக்காளி - 2, சீரகம் - 10 கிராம்,
மிளகு - 15 கிராம்,
சின்ன வெங்காயம் - 1 கப்,
பூண்டு - 5 பல்,
கடுகு, உளுந்து -5 கிராம்,
பெருங்காயத் தூள் - சிறிது,
தனியா - 10 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
மல்லித்தழை - சிறிது,
உப்பு, காய்ந்த மிளகாய் - தேவையான அளவு,
எண்ணெய் - 20 மில்லி

செய்முறை :

வரமல்லியை (தனியா) நிறம் மாறும் வரை வறுத்துப் பொடியாக்கவும்.

பிறகு சீரகம், மிளகு, பூண்டு இவற்றை இடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர், இடித்து வைத்த மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்த்து வதக்கவும்.

பின் வறுத்துப் பொடியாக்கிய தனியாவை இதனுடன் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய மல்லித்தழையை சேர்த்து இறக்கினால் வெங்காயச் சாறு தயார்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner