Ads Header

Pages


30 April 2012

அருசுவை அரசு கேள்வி-பதில் - வீட்டுக்குறிப்புக்கள்!

சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்?

அதிக கெட்டியாகப் பிசையாமல், தண்ணீர் சற்றுத் தெளித்து கொஞ்சம் லூசாகப் பிசைந்து தேய்க்கலாம். மாவு கையில் ஒட்டாமலிருக்க வேண்டுமானால், அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசையலாம். அதேநேரம் அடுப்பில் சப்பாத்தியை தேய்த்துப் போடும் போது, கல்சூடு சரியாக இருக்கணும். அப்போதுதான் சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்பும்.

சப்பாத்தி இட்டு, முதலில் சூடான தவாவில் போட்டு, கூடவே பக்கத்து அடுப்பையும் எரிய விட்டு, அதில் இந்த சப்பாத்தியை ஃபுல்கா போல் சுட்டாலும் ‘புஸ்’ என்று எழும்பும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம்?

நறுக்கிய வெங்காயம், கேரட், காலி ஃப்ளவர், பட்டாணி போன்றவற்றுடன் கடுகு, உளுந்து தாளித்து, வதக்கி வேகவைத்து, அதை வேகவைத்த புட்டுமாவில் கலந்து மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இனிப்பு விரும்பும் குழந்தைகளுக்கு கேழ்வரகு புட்டில் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொடுக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க, உப்பைக் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாமா?

காய்கறி வேகவைக்கும்போது அதில் கல் உப்பு சேர்த்து வேக வைத்து சாம்பாரில் சேர்க்கலாம். அல்லது புளித்தண்ணீரில் கல் உப்பு போட்டுக் கொதிக்க விட்டும் சாம்பாரில் சேர்க்கலாம்.

குழம்பில் உப்பைக் கடைசியாகச் சேர்ப்பது சரியல்ல. சாம்பாரில் மணமே இருக்காது.
---------------------------------------------------------------------------------------------------------------
நேந்திரம் பழச் சிப்ஸை வீட்டில் செய்யும்போது, கடைசியாக உப்பைத் தூவினேன். ஆனால் சிப்ஸில் உப்பு இறங்கவே இல்லை நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்படிச் சேர்ப்பது?

நேந்திரம் பழ சிப்ஸை எண்ணெயில் பொரிக்கும் போதே, எண்ணெயில் உப்புத் தண்ணீரைத் தெளித்துச் செய்வார்கள். அப்போதுதான் சிப்ஸில் உப்பு நன்கு பிடிக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
பிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்?

பேபிகார்ன் கோஃப்தா கிரேவி, பேபிகார்ன் கிரேவி, பேபி கார்ன் பொரியல் பண்ணலாம்.

பேபிகார்ன் பொரியலுக்கு, நறுக்கிய பேபிகார்னை புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேகவைத்து, வற்றல் மிளகாய், பெருங்காயத்தூள், கடுகு போட்டு வெடிக்க விட்டு, பேபிகார்ன் போட்டு வதக்கி அதில் பட்டாணியையும் வேகவைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். இதே டிஷ்ஷில் குடமிளகாய் சேர்த்து பொரியலும் செய்யலாம்.

பேபிகார்னை நைசாக வெட்டி, பட்டாணி சேர்த்து, பேபி கார்ன் பீஸ் கலந்த சாதமும் பண்ணலாம்.

பேபி கார்ன், பட்டாணி, குடமிளகாய், லவங்கம், பூண்டு என மசாலா அயிட்டங்களைச் சேர்த்து, புலவு சாதமும் செய்யலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வருவதில்லை. அமுங்கி விடுகிறது. நன்றாக வர என்ன செய்வது?

லட்டுக்கு பூந்தி தேய்க்கும்போது, எண்ணெய் கொதி சரியாக இருந்தால் முத்து அழகாக விழும். மாவு நீர்க்க இருந்தால் முத்து முத்தாக விழாது. காராபூந்திக்குச் சிறிது அரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெயின் காய்ச்சல், பூந்தி தேய்த்ததும் பொரிந்து விடுவது போல் இருக்க வேண்டும்.

இரண்டு டம்ளர் கடலை மாவுடன் ஒரு டம்ளர் அரிசிமாவைச் சேர்த்துக்கொண்டால் பூந்தி எண்ணெய் குடிக்காது.
--------------------------------------------------------------------------------------------------------------
புழுங்கல் அரிசி சேர்க்காமல், பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது?

பச்சரிசியில் இட்லி பண்ணும்போது, உளுந்தை சாதாரணமாகப் போடும் அளவைவிட சற்று அதிகம் சேர்த்துக் கொண்டால், இட்லி நன்றாக வரும்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண் குழந்தைகள் புஷ்டியாக சத்துடன் இருக்க, உளுந்து களி கொடுப்பார்கள். இதை எப்படிச் செய்வது?

அந்தக் காலத்தில் உளுந்தை ஊறவைத்து, அரைத்து, அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் விட்டு, வழுவழுவென்ற அரைத்த உளுந்தைப் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறுவார்கள். தாராளமாய் நெய்யையும் சேர்த்துக் கிண்டி உளுந்து களி செய்வார்கள். இதற்கு நேரமும், சமயோசிதமாய் செய்யக்கூடிய ஆற்றலும் வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் அடிப்பிடித்து வீணாகிப் போகும்.

உளுந்தை சிவக்க வறுத்து, மாவாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை இளம்பாகாக கொதிக்க விட்டு, இந்த மாவைக் கொட்டி, மிதமான தீயில் கோவா சேர்த்து களி மாதிரி கிளறி நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும்.

காரக் களி எனில், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடிக்க விட்டு, பச்சைமிளகாய், இஞ்சி போட்டு தாளிக்கவும். அதில், வறுத்த உளுந்து மாவை பருப்பு உசிலிக்கு வேக வைப்பது போல் வேக வைத்துப் போட்டு உப்பு, சேர்த்து உப்புமா போன்றும் செய்து சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner