Ads Header

Pages


22 April 2012

வெஜிடபிள் சூப்--உளுந்து சப்பாத்தி-- வெஜிடபிள் ரைஸ் - சமையல் குறிப்புகள் !



வெஜிடபிள் சூப்


தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி - அரை கப், தண்ணீர் - மூன்று கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன் (சற்று குவித்து அளக்கவும்), மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி (அ) வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி.

செய்முறை: தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் காய்கறிகளை சேர்த்து அரை வேக்காடு வேக விடவும். காய்கறிகள் பாதி அளவில் வெந்து கொண்டிருக்கும்போது இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும், கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். தீயைக் குறைத்து கிளறவும். மீண்டும் 3 நிமிடம் கொதித்ததும் இறக்கி, மிளகுத்தூள், வெங்காயத்தாள் (அ) கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

இந்த காய்கறி சூப்பில் கிரீம் சேர்த்து செய்யாததால் உடல் எடை கூடாது. கலோரி குறைவு.வயிற்றுக்கும் நிறைவாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------

உளுந்து சப்பாத்தி


தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சோயாமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

பூரணத்துக்கு: உளுந்து - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: கோதுமை மாவையும் சோயா மாவை யும் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும் (ஒரு குச்சியை விட்டுப் பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்).

பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும். உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.

சப்பாத்திக்குள் வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து செய்வதுதான் வழக்கம். ஆனால், இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது.
--------------------------------------------------------------------------------

வெஜிடபிள் ரைஸ்


தேவையானவை: பாஸ்மதி அரிசி சாதம் - 2 கப், கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி சாறு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க : நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், முந்திரி - 4 (அ) 5.

செய்முறை: நெய்யை காய வைத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முந்திரி, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமி டம் வதக்கவும். பிறகு காய்கறிகளை சேர்த்து, வேகும்வரை வதக்கவும். தக்காளி சாறு, மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். கரம் மசாலா, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எப்போதும் குழைத்த சாதத்தையே சாப்பிடும் குழந்தைகள், இந்த உதிர் உதிரான சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காய்கறிகளில் உள்ள அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும்!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner