Ads Header

Pages


17 April 2012

மாதவிலக்கு கால ஆலோசனை நாட்டு வைத்தியம் !

"என்ன கோமதி! என்னாச்சு உடம்புக்கு? ஏதோ ஜீவனே இல்லாத மாதிரி நடந்து போறே?''

"வாங்க பாட்டி! உங்களை பார்க்கத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.''

"பாட்டி நினைப்பு வந்ததுன்னா ஏதோ பிரச்சினையில் இருக்கே! சரிதானா?"

"உண்மை தான் பாட்டி! நீங்க சொல்ற ஆலோசனை எங்களுக்கு எப்பவுமே பிரயோஜனமா இருக்கிறதால தான் உங் களை தேடிப்பிடிச்சி விஷயத்தை வாங்கறோம்.''

"விடு! நீ வைக்கிற ஐஸ் இந்த வெயில்ல கூட உடம்பை ஜில் லுன்னு ஆக்கிடுச்சி. சரி இப்பவாச்சும் உன் பிரச்சினை என்னன்னு சொல்றியா கண்ணு?''

"மாதவிலக்கு பிரச்சினைதான் பாட்டி! மாசத்துல 10 நாள் நான் படற அவஸ்தை வேற யாருக்குமே வரக்கூடாது. ஏன் பாட்டி இப்படியொரு வலி வேதனை?''

"எந்த மாதிரி வலி உன்னோடது? சிலருக்கு மாதவிலக்கு வர்றதுக்கு முன்னாடியே வலியும் வேதனையும் தொடங்கிடும். நாலைஞ்சு நாளில் சரியாகிற மாதிரியெல்லாம் இருக்காது. ஒரு வாரம் தாண்டியும் இழுத்துடும். சிலருக்கு வழக்கமான அளவில் இருந்தாலும் அந்த 3 நாட்களிலும் உயிர் போய் வந்த மாதிரி ஆயிடும். அப்படியொரு அவஸ்தை. அதிக ரத்தப் போக்கு நாளடைவில் ரத்தசோகை நோயைக் கொண்டாந்துடும். அதோடு மேங்கனீஸ்னு சொல்ற தாது சத்து பற்றாக்குறையும் ஏற்பட்டு விடும்.''

"இதை சரி பண்ண என்ன செய்யணும் பாட்டி?''

"சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தினாலே போதுமானது. காய்கறிகள், பழங்கள், பயறுவகைள், தானிய வகைகள் அதிகமா சாப்பாட்டுல சேர்த்துக்கணும். பழங்கள்னு பார்த்தா அன்னாசி, மாதுளை, சப்போட்டா அனுதின சாப்பாட்டுல இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்.''

"அதிக ரத்தப்போக்கு ஏற்படறது உடம்பை எந்த மாதிரி பாதிக்கும் பாட்டி?

''கருப்பையில் பருக்கள் உருவாகி தொந்தரவு கொடுக்கும். இது ரத்தக்குழாயில ஊனத்தை ஏற்படுத்திடும். போகப்போக கருப்பை நிலையில்லாம இங்கும் அங்குமா ஆடற நிலையில் கொண்டாந்து விட்டுடும். இந்த மாதிரி நிலையில் கர்ப்பம் ஆகிற பெண்களுக்கு அது புறக்கர்ப்பமா ஆயிடறதுக்கும் வாய்ப்பு உண்டு.''

"அதென்ன பாட்டி புறக்கர்ப்பம்?''

"கருக்குழாயில தங்கி வளர வேண்டிய கரு, கருக்குழாய்க்கு வெளியில இருக்கிற டிïப்ல வளர்ந்து டிïப் வெடிச்சுடும். கருவும் அதுல அழிஞ்சிடும். அதனால் கரு உருவானது தெரிஞ்சதுமே இப்படி மாதவிலக்கு சிக்கல் உள்ளவங்க டாக்டரை போய் பார்த்து செக்கப் பண்ணிக்கிறது நல்லது.''

"மாதவிலக்கு சமயத்துல உப்பு பெறாத விஷயத்துக்கும் கோபம் பொத்துக்கிட்டு வருதே, ஏன் பாட்டி?''

"உடல்ரீதியான பிரச்சினை கொஞ்சம் அதிமாயிட்டுதுன்னா யாருக்குமே கோபம், எரிச்சல் வரத்தாண்டியம்மா செய்யும். உடல்ல ஏற்படும் ஹார்மோன் மாற்றம் தான் இதுக்குக் காரணம். இந்த மாதிரி சமயத்துல மார்பகம் கல்லு மாதிரி ஆகி வலி கொடுக்கும். உன்னை மாதிரி நடுத்தர வயசில உள்ள பொண்ணுங்களுக்குத்தான் இந்த மாதிரியான பாதிப்பு அதிகம்.

சிலருக்கு மாதவிலக்கு வர்ற நாலு நாளுக்கு முந்தியே தொந்தரவு அறிகுறிகள் ஆரம் பிச்சிடும். கால்சிய சத்துக் குறைவால இது ஏற்படுது. தலைவலி, உடம்பு வலின்னு ஆரம் பிச்சு உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி ஆயிடும். இந்த மாதிரி சமயங்களில பால் அதிகமா சாப்பிடறது நல்லது. அதிலும் உன்மாதிரி நாப்பது தாண்டினவங்க ஆடை நீக்கிய பால் தான் சாப்பிடணும். கொழுப்புச் சத்து இல்லாத தயிர் சாப்பிடலாம். கீரையில் நிறைய கால்சியம் சத்து இருக்கு. தினம் ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்த்துக்கணும். கால்சியம் மாத்திரையும் சாப்பிடலாம்.

"மாதவிலக்கு சமயத்தில் உடம்பில் ஒருவித உஷ்ணம் இருக்கிற மாதிரி ஒரு பீலிங் இருக்குதே, அது ஏன் பாட்டி?''

"ஹார்மோனில் உள்ள ஈஸ்ட்ரோஜன் குறையும்போது இயற்கையாகவே உடம்பில் சூடு ஏறி விடுகிறது. அதிக ரத்தப் போக்கு தான் இதுக்கும் காரணம். இம் மாதிரியான சூழல்ல எலும்பு பலவீனப்பட்டுப் போயிடும். இது அடிக்கடி தொடர்ந்தா தோல்ல சுருக்கம் ஏற்படத் தொடங்கிடும். இதை சரி பண்ணவும் சில உணவு வகைகள் இருக்கு. சோயாபீன்ஸ், சோயா பால், சேனைக்கிழங்கு, கிரேப், ஆப்பிள், பேரிச்சம்பழம்னு உணவு முறையை மாத்திக்கிட்டோம்னா இந்த பல வீனம் கிட்ட வராது.''

"ஆயுர்வேத மருத்துவ முறையில் இதுக்கு மருந்து உண்டா பாட்டி?''

"ஓஹோ! இந்தக் கிழவிக்கு என்ன தெரியும்னு டெஸ்ட் பண்றியாக்கும்? அதையும் சொல்றேன் கேட்டுக்க!

ஆயுர்வேதத்துல மருந்துகளை விட அதிகமா உணவு முறை பற்றித்தான் சொல்லியிருக்கு. பப்பாளி, திராட்சை, அன்னாசின்னு பழ வகைகளை சாப்பிட லாம்னு சொல்றாங்க.

குதிரைங்க சாப்பிடுமே கொள்ளு! அது குதிரைக்கு மட்டும்னு இல்ல. மனுஷங்களுக்கும் தான் நல்லது. இந்த கொள்ளை கஷாயம் வெச்சு சாப்பிடலாம். அதோடு நெல்லிக்காய், முருங்கைக்காய்னும் தினசரி உணவுப் பட்டியல்ல இடம் பிடிக்கிற மாதிரி பார்த்துக்கணும்.

இந்த மாதிரி சமயங்களில்ல மனசை அழுத்துற மாதிரியான பிரச்சினைகளை நினைச்சி கவலைப்படறதை விட்டுடணும். குறிப்பா யார் மேலயும் கோபம், எரிச்சல் ஆகவே ஆகாது. அதோட அதிகக் குளிர் உடம்புக்கு ஆகாது. ரொம்ப காற்று வர்ற மாதிரி உள்ள இடங்களில் படுக்கக்கூடாது. குளிர்ஜுரத்தில கொண்டு விட்டுடும்.

மாதவிலக்கால அதிக ரத்தப் போக்கு இருந் துச்சுன்னா நெல்லிக்காய் சாறெடுத்து அதை தேனில் கலந்து பருகலாம். வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். மல்லி ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம்.

இதெல்லாம் உடம்பை பாதுகாக்கக்கூடிய இரும்புச்சத்து சம்பந்தப்பட்டவை. அரிசி மாவுடன் முளை விட்ட வெந்தயத்தை அரைத்து பலகாரம் பண்ணியும் சாப்பிடலாம். சாம்பார் வெங் காயம்னு சொல்ற சின்ன வெங்காயத்தை நெய்ல வதக்கியும் சாப்பிடலாம்.''

"பாட்டி! நாலு நாள் அவஸ்தை முடிஞ்ச பிறகு வழக்கமான சாப்பாடு சாப்பிடலாமில்லையா?''

"எதைச் சாப்பிட்டாலும் அதை சத்துள்ளதா சாப்பிட கத்துக்கணும்னு தான் இவ்வளவும் சொன்னேன். பொதுவா எள் கொஞ்சம் அதிகமா உணவில் இருக்கும்படி பார்த்துக் கிட்டா நல்லது. எள்ளுக்கு இழந்த ரத்தத்தை மீட்டுத் தர்ற பவர் இருக்கு.

எள்ளை வெல்லம் கலந்து உருண்டை பண்ணி சாப்பிடலாம் எள்ளுப் பாயசம் சாப்பிடலாம்.அதோடு ஆடை நீக்கிய பாலை தினசரி உணவுப் பட்டியல்ல சேர்த்துக்கலாம். தண்ணீர் தாகம் எடுக்கறப்ப கேரட் ஜுஸ் சாப்பிடலாம். இதெல்லாம் இழந்த ரத்த இழப்பை ஈடுகட்டும்.''

"பாட்டி ரொம்ப நன்றி! மாதவிலக்கு சமயத்தில் என்னென்ன சாப்பிட்டால் நல்லதுன்னு ஒரு பெரிய பட்டியலே தந்துட்டீங்க! இப்பவே உடம்பெல்லாம் லேசான மாதிரி அப்படியொரு சந்தோஷமா இருக்கு!''

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner