Ads Header

Pages


28 April 2012

மாம்பழம் தரும் அழகுக் குறிப்புகள் இயற்கை தரும் இளமை வரம்!

முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா..

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை 'மேங்கோ பட்டர்' என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது.

சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

மேங்கோ பட்டர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்.. இந்த நான்கை யும் சம அளவில் கலந்து மிக்ஸி யில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகுத்தொல்லை போயே போச்சு. பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்கும்!

நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்னும்!

பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, டல்லடித்த முகமும் டாலடிக்கும்! இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருது-வாக்கும்.

மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின்னும்!

புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது மாம்பழச் சாறு! ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும்.

புருவங்களில் விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெயை ஒரு துளி தடவி, இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.

மாம்பழக் கன்னங்கள் வேண்டுமா? நன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 2 சிட்டிகை, பார்லி பவுடர் ஒரு டீஸ்பூன், வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன்.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 'மாஸ்க்' மாதிரி தடவி, 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழுகொழு வென்று நிறமும் கூடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner