
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். ஆனால், அன்பால் கட்டிப்போட்டுவிடாதீர்கள். உள்ளக் கரைகளை, தொட்டுச் செல்லும் கடலலைகள் போல் அன்பு இருக்கட்டும்.
அன்பு, பாசம், காதல், உறவுகள் பற்றிப் பேசும்போது பாரசீகக் கவிஞன் கலீல் கிப்ரனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வரும்.
நிலையான, அரவணைக்கும் உறவுகள் நமது மனநலத்துக்கு முக்கிய தேவை. நாம் நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வே நமது மனச்சோர்வுகளைத் தள்ளி வைத்து, நன்றாக இருக்கிறோம் என்ற சந்தோஷ உணர்வைத் தருகிறது. அன்பும் வாழ்க்கையும் சிக்கலான விஷயங்கள். சட்டென்று பிரச்னைகளில் சிக்கி உறவுகள் குறித்து அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் நமக்கு கொடுத்துவிடும். உறவுகளை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. எப்போது ஒருவரிடம் அன்பையும் பாசத்தையும் செலுத்துவது என்று முடிவு செய்கிறோமோ, அந்த நொடியிலிருந்து இருவருமே ஈருடல் ஓருயிராகத்தான் வாழவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை மதிக்கவேண்டும். ஆனால் அதற்காக ‘எனது தனித்துவம் இது’ என்று எதிரும் புதிருமாக நிற்கக்கூடாது. மற்றவரின் அன்பைவிட உலகத்தில் வேறு எதுவும் முக்கியமில்லை. தனிப்பட்ட ஆசைகள், மதம், தொழில் எதுவுமே அன்புக்கு குறுக்கே நிற்கக் கூடாது. உதாரணமாய், இருவரும் வெவ்வேறு மதத்திலிருந்து வந்திருந்தாலும் அது பிரச்னைக்குரிய விஷயமாய் இருக்கக்கூடாது. உங்கள் மதநம்பிக்கையை உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷத்துக்கு பயன்படுத்துங்கள். அதுவே மோதல்களுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக விட்டுவிடாதீர்கள். நல்ல மனிதர்களாய் வாழவேண்டும். இதுவே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை குறிக்கோளாக இருக்கட்டும்.
உறவுகள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் நீடிக்க ஐந்து விஷயங்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. அவற்றை எப்போதும் ‘5 சி’ (5சி) என்று குறிப்பிடுவோம். காரணம் அந்த ஐந்து அம்சங்களின் ஆங்கில முதல் எழுத்து ‘சி’ (சி).
மரியாதை கொடுங்கள் (Courtesy) : ஒரு விஷயம் எப்போதுமே நமக்கு வேடிக்கையாகவேதான் இருக்கும்! முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் நாம் மரியாதையாக நடந்துகொள்வோம். ஆனால், நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் அந்த மரியாதையைக் காட்டுவதில்லை. ‘தாங்க் யூ’ என்று நன்றி சொல்வதிலும், ஒரு காரியத்தைச் செய்யச் சொல்வதற்கு முன்பு ‘ப்ளீஸ்’ என்று சொல்வதிலும் நமது அன்பு பல மடங்கு அதிகமாய் வெளி தெரிகிறது. அதேபோல் முன்பின் தெரியாதவர்களிடம் கோபம் கொள்ளும்போது நாக்கை கொஞ்சம் அடக்கிக்கொள்கிறோம். ஆனால், நெருங்கியவர்களிடம் கோபம் கொள்ளும்போது வார்த்தைகளால் விளாசிவிடுகிறோம். இது சரியா? கொஞ்சம் யோசியுங்கள்.
தொடர்பை விடாதீர்கள் (Communication) : இந்த விஷயத்தை உறவுகளின் அஸ்திவாரக் கல் என்று சொல்லலாம். ஒரு சண்டையில் உங்கள் நாள் முடிய வேண்டாம். உங்களுக்குள் பிரச்னைகள் இருக்கலாம். அதைத் தீர்க்க முடியாமலும் இருக்கலாம். ஆனால், ஒருவர் மீது ஒருவர் கோபத்துடன் உறங்கச் செல்லாதீர்கள். நண்பர்களாகவே இருங்கள். நண்பர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதனால் மற்றவர் கருத்துகளுக்கும் செவி கொடுங்கள். ஒரு விஷயத்தை மட்டும் கவனமாப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கிடையே மௌனம் வந்து அமர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் போய்விடக்கூடாது. சின்ன மௌனம் கூட நீண்டு, கடக்க முடியாத மௌனமாகிவிடும். உறவுகள் உடையாமலிருக்க நகைச்சுவையை ஒரு கேடயமாகப் பயன்படுத்தலாம். ஒருவரை பார்த்து ஒருவர் சிரிக்காமல் இருவரும் ஒன்றாகச் சிரித்தால் அந்த உறவு பலப்படும். எது எப்படியிருந்தாலும் ஒரு தம்பதி நல்ல நண்பர்களாக வாழ்ந்தால், அதைவிட நல்ல வாழ்க்கை இருக்க முடியுமா?


உறுதியாய் இருங்கள் (Commitment): திருப்பித் திருப்பிச் சொல்வதுபோல் இருக்கிறது. ஓர் உறவுக்குள் நுழைய முடிவு செய்யும்போதே அது ஓர் உறுதியான விஷயமாகிவிடுகிறது. ஆனால், இந்த உறுதியை தினந்தோறும் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். சில சமயங்களில் ‘என்னடா இது விட்டுவிடலாம்’ என்று தோன்றும். ஆனால், அந்த எண்ணம் மட்டும் வேண்டாம். புயலடிக்கிறதோ, தென்றல் வீசுகிறதோ அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்வது என்று முடிவு செய்தபிறகு மனம் அலைபாயக் கூடாது. ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பையும் பாசத்தையும் ஒரு மனிதருக்கு கொடுப்பதுபோல் ஆரம்பத்தில் இருந்தாலும் உண்மையில் நீண்ட நிலைத்த உறவுகளுக்குத் தான் அவற்றைக் கொடுக்கிறோம். நீடித்த உறுதியான உறவுகளுக்கு இதுவே அடிப்படையாக இருக்கும்.
0 comments:
Post a Comment