Ads Header

Pages


10 April 2012

இதய வாசலை திறக்கும் இனிய சாவிகள்! - அமுத மொழிகள்


இதய வாசலை திறக்கும் இனிய சாவிகள்!
இயல்பில் இருக்கிறது இனிமை

பிறரைப் படிப்பவர்கள் அறிவாளிகள்

தம்மைத்தாமே படிப்பவர்கள் ஞானிகள்...

ஞானிகள் பலர் இந்த உலகில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் `சூபி' ஞானிகளும் அடங்குவர்.

ஒரு சூபி ஞானி எப்படி இருப்பார் என்பதற்கான ஒரு கதை.

சூபி ஞானியின் புகழ் நாடெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

அவரிடம் யார் என்ன கேள்வியைக் கேட்டாலும், எத்தனை கேள்விகளை கேட்டாலும் தெளிவாகவும், சுருக்கமாகவும், அறிவுப்பூர்வமாகவும் விடை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். அதே நேரத்தில் ஆழ் கடலின் மையத்தை போல் சலனமில்லாமல் அடக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்.

அவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அவரது ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள்.

இளமையின் துடிப்பு அவர்களுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அந்த துடிப்பில் அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

கேள்விகளாலேயே அந்த வேள்வியைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சுருக்கமாகப் பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வியைக் கேட்டு அவரை அவமானப்படுத்த திட்டமிட்டனர்.

பல நாட்கள் நன்றாகச் சிந்தித்து ஒரே ஒரு கேள்வியைத் தேர்வு செய்தனர்.

இளமையின் மிடுக்கோடும், ஆணவத்தின் மமதையோடும் அவரிடம் சென்றனர்.

இளைஞர்களைப் பார்த்தார் ஞானி...

அன்புடன் அவர்களை வரவேற்று `உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?' என்று கேட்டார்.

`எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. உங்களுக்குத்தான் இன்று பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது', என்றனர்.

`அப்படியா!..., சரி சொல்லுங்கள்', என்றார்.

`வேறொன்றுமில்லை, நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சுருக்கமாக நீங்கள் உடனே பதில் சொல்லியாக வேண்டும்' என்றனர்.

`சரி! கேளுங்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்'.

இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?

எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன?

- இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது, ஒரு வேளை சொன்னாலும் நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும். நாம் கேட்டபடி சுருக்கமாகச் சொல்ல முடியாது, என்றெல்லாம் அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தனர்.

சூபி மகானோ இரண்டே இரண்டு வரிகளில் இதற்குப் பொருத்தமாய், பொறுமையாய் விடை சொன்னார்.

`காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும், காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'.

ஞானியார் சொன்னதும் இளைஞர்கள் சிந்தனைச் சிறகுகளை விரித்தனர். அடடா! இதுதானே உண்மை. இயற்கையின் படைப்பு இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த ஞானியின் அறிவாற்றலைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.

அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானத்திற்குள்ளானார்கள். கடைசியில் அவரிடமே அடைக்கலமாயினர்.

ஞானியாரின் பதிலைப் படிக்கின்ற போது, நமக்குள்ளும், `அடடா, இவ்வளவு ஞானம் பெற்ற இந்த சூபிகள் யார்? அவர்களின் ஞானத்திற்கான திறவுகோல் எது?', என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

`சூபி' எனப்படுவது ஒரு ஞானத்தின் நிலை.

கண்ணன் காட்டிய கீதை போல்; புத்தர் காட்டிய தம்மபதம் போல்; அரபு நாடுகள் வழங்கிய அருட்கொடைதான் `சூபி' எனப்பட்டது.

இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் பின்பற்றுகின்ற பாதை தான் சூபி. இவர்களைத்தான் சூபி ஞானிகள் என்று அழைத்தனர்.

`சூபி' என்றால் கம்பளி என்ற பொருளும் உண்டு.

கம்பளிப்பூச்சி கூட்டுப் புழுவாகி வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்து பறப்பது போல், சராசரியாக உள்ள ஒரு மனிதன்- தன்னுள் சுருங்கி, சுருண்டு, உருமாற்றம் பெற்ற வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கலாம் என்பதை கண்டுணர்ந்தவர்கள் இந்த சூபி ஞானிகள். அதனால்தான் அவர்கள் கம்பளி ஆடையை எப்பொழுதும் போர்த்திக் கொண்டுள்ளனர்.

சூபிகளின் வாழ்வே மற்றவர்களுக்கு ஒரு போதனையாகத் திகழ்கிறது. வாழ்க்கை ஒரு நதியின் பிரவாகம் போன்றது. மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல், கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிவு பெறுகின்றது. இடையிடையே எத்தனையோ மேடுகள், பள்ளங்கள், போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட காயங்கள், வலிகள் இவை அத்தனையையும் அதன் இயல்பு மாறாமல் அப்படியே ஏற்றுக்கொள் என்கிறது சூபி ஞானம்.

ரெயிலில் பயணம் செய்கிற வாய்ப்பு ஏதேனும் ஒரு விதத்தில் கிடைத்திருக்கும். ஜன்னலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு பாதையின் ஓரத்தில் உள்ள மரங்கள் பின்னோக்கி ஓடுவதைப் பார்த்திருப்போம். குறிப்பாக சிறு வயதில் இந்தக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் மனசு மகிழ்ச்சியில் துள்ளும். மனதின் இயல்பான குணம் இது.

உண்மையில் மரங்கள் இருந்த இடத்தில் அப்படியே தான் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும் வண்டிதான் முன்னோக்கி ஓடுகிறது. வாழ்க்கையில் நாம் தான் இயல்பாக இருப்பதில்லை. அதனால் நமக்கு மற்றவர்கள் வித்தியாசமாகக் காட்சி அளிக்கின்றனர்.

சூபி ஞானிகளும் இதைத்தான் உணர்த்துகின்றார்கள். இயல்பை இயல்பாக உணர்ந்து, அதன் இயல்போடு அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சூபிகளின் தத்துவம்.

இதயவாசலை திறக்கும் இனிய சாவிகள்
இயற்கை அபாரமான ஆற்றலையும் ஞானத்தையும் வழங்குகின்றன. இந்த இயற்கை வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. கடலில் விழும் அதே மழை தான் மண்ணிலும் விழுகின்றது. காட்டில் காயும் நிலவுதான் மாளிகையிலும் காய்கின்றது. மலைகளில் வீசும் அதே காற்றுதான் சமவெளிகளிலும் வீசுகின்றது. இப்படி இயற்கை எல்லா இடத்திலும் இயல்பாகவே இருக்கின்றது.

மனித மனம் மட்டும்தான் இயல்பை மீறி பிடித்தவை, பிடிக்காதவை என்று பிரித்துப் பார்க்கின்றது. சூபிகளின் தத்துவம் நல்வாழ்வுக்கான தத்துவம்.

ஒவ்வொருவருக்குள்ளும் சூபி தன்மை உண்டு. மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் நல் முத்துக்களைக் கொண்டு வர முடியும். அதுபோல் மனதிற்குள் தேடுபவர்கள்தான் அதைக் கண்டடைய முடியும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner