ஒரு பெண்ணுக்கு உடல், மனம், உணர்வு என இந்த மூன்றுமே நல்ல நிலையில் இருப்பதைத்தான் நலமாக இருப்பது (Wellness) என்று சொல்ல முடியும். ஆனால், நம்மில் நிறையப் பேர் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதேயில்லை. உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பதைத்தான் ஹெல்த்தியாக இருப்பது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
சுகுமாரி ஒரு இல்லத்தரசி. தன் வேலையை ரொம்பவும் நேசிப்பவளும்கூட. தன் பிள்ளைகள் பள்ளியிலேயே சிறந்த மாணவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புவாள். அதற்காக குழந்தைகளோடு நேரம் செலவிடுவாள். அதே சமயத்தில் கணவன் வீட்டுக்கு வரும் சமயத்தில், வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இத்தோடு புதுப்புது ரெசிபிகளைச் செய்து குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளையும் வாங்க வேண்டும். தலைவலி மண்டையைப் பிளக்கும் போதும் வெளியில் சொல்லாமல் சிரித்த முகத்துடன் மாமியாரை கோயிலுக்குச் கூட்டிச் செல்ல வேண்டும். மாமனாரின் ஹெல்த் செக்கப்புக்கும் அவளேதான் துணையாகப் போகிறாள்.
சுகுமாரிக்கு சில நேரங்களில் உணர்ச்சியே இல்லாததுபோல் இருக்கிறாள். வீட்டைவிட்டு ஓடிப்போய் தன்னுடைய உண்மையான சந்தோஷத்தைத் தேட மாட்டோமா என்று கூடத் தோன்றும்.
இந்த 21_ம் நூற்றாண்டில் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்கள். பல வழிகளிலும் நம்முடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். விதவிதமான கல்வி கற்பதற்கான வழிகள் தினமும் திறந்து கொண்டிருக்கின்றன. வேலைவாய்ப்பிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய சுதந்திரம் ஒரு விலையுடன்தான் நமக்கு வந்திருக்கிறது. நம்முடைய இந்த புதிய ரோலோடு, நாம் ஏற்கெனவே காலம் காலமாக வகித்து வரும் தாய், மனைவி, மகள், மருமகள் போன்ற ரோல்களையும் விடமுடியாதவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஒரு கம்பெனியில் உயர் அதிகாரியாக இருந்தாலும்கூட, உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் அவன் அருகில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும். நீங்கள் வெளியே வேலைக்குச் செல்லாத ஒரு குடும்பத்தலைவியாக இருந்தாலும்கூட உங்கள் குழந்தைகளுக்குத் தேவையானதைத் தந்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்லபடியாக முன்னேறுவதற்கு உதவும் டென்ஷனும் ஸ்டிரெஸ§ம் உங்களுக்கு இருக்கிறது.
இது போன்ற பொறுப்புகளும், அவற்றைச் செயல்படுத்துவதில் இருக்கும் டென்ஷனும் சேர்ந்து கொள்வதால், நம் இந்தியப் பெண்களிடையே ஹைப்பர் டென்ஷன், டயபடீஸ் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இந்த மூன்று பிரச்னைகளுமோ சேர்ந்து வந்து கடைசியில் பல பெண்களை இதய நோயில்கூட கொண்டு விட்டு விடுகிறது... பெண்கள், தங்கள் குடும்ப விஷயங்களோடு தங்கள் உடல் நலனைக் கவனிப்பதில் கடைசிபட்ச அக்கறைதான் காட்டுகிறார்கள்! கருப்பை கேன்சர் மற்றும் மார்பக கேன்சர் போன்ற நோய்கள் உள்ள பெண்கள், எவ்வளவு சீக்கிரம் தங்களுக்கு உள்ள பிரச்னைகளைக் கண்டுபிடிக்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்களுடைய வாழ்நாள் நீடிக்கும். பெண்கள் நலமாக வாழ நோய்கள் வராமல் எப்படி தடுப்பது? மேலே சொன்ன உதாரணத்தையே பார்ப்போம். சுகுமாரி தன் ஒவ்வொரு நாள் வேலைகளுக்கு இடையிலேயும் தனக்கான ஒரு நேரத்தை முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன் உடல் நலனைக் கவனிக்க அளவான உடற்பயிற்சி, சரியான உணவு, ஸ்டிரெஸ்ஸை விரட்டும் யோகா, பிரணாயாமம், தன் மனசுக்குப் பிடித்த மியூஸிக் அல்லது நல்ல புத்தகத்தைப் படிப்பது போன்ற சில விஷயங்களை ஃபாலோ செய்தாலே சுகுமாரிக்குத் தேவைப்படும் சந்தோஷம் கிடைத்துவிடும்.
நம் வாழ்க்கையை நாமே நல்ல முறையில் மாற்றிக் கொள்ள இதோ இந்த 12 வழிகள் அதற்கு உதவும்!
முதல் மாதம்
உங்கள் வாழ்க்கையை நீங்களே கண்ட்ரோல் செய்யுங்கள்
உடல் நலம் சீராக இருக்க முழு கவனம் செலுத்துங்கள்.
டாக்டரிடம் முறையாக ஹெல்த் செக்கப் செய்து கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்.
நீங்கள் என்ன எடை இருக்க வேண்டுமென்பதைக் கண்டுபிடித்து அதையே லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
2ம் மாதம்
உடல் எடையில் கவனமாக இருங்கள்
உங்கள் ஹெல்த்துக்கு எந்த பிராப்ளமும் வராமல் தடுக்க உங்கள் உடல் எடையில் கவனமாக இருங்கள்.
சத்தான ஸ்நாக்ஸ்களுக்கு மாறுங்கள்.
ஒரு துண்டு பழம் அல்லது குறைந்த அளவு கொழுப்புச் சத்துள்ள பால் அல்லது மோர் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பொரித்த உணவு அயிட்டங்களை விட உங்கள் உடல்நலத்துக்கு நல்லது.
நிறையத் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் உங்கள் உடலிலுள்ள திசுக்களில் அதிசயங்களை உண்டு பண்ணி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
ஒரு நாளைக்கு ஐந்து சிறு கப் அளவுக்கு பழம்/காய்கறிகள் எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்களும் உடல் நலத்துக்கு நல்லதுதான்.
உணவுப் பொருட்கள் வாங்கும்போது வெறும் வயிற்றுடன் செல்லாதீர்கள் அதிகமாக வாங்கிவிடுவீர்கள்.
3ம் மாதம்
எக்ஸர்சைஸ் செய்யுங்கள்
நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ எக்ஸர்சைஸ் செய்யுங்கள்: உங்களுடைய குடும்ப நபர்களை வீட்டுவேலை செய்வதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் எக்ஸர்சைஸ் செய்யும்போதும், சில கலோரிகள் எரியும். எனவே கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கலோரியை எரிக்க பயன்படுத்துங்கள். முதலில் சிறு சிறு எக்ஸர்சைஸ் செய்வதில் ஆரம்பித்து, பிறகு கடினமாக எக்ஸர்சைஸ்களைச் செய்யுங்கள்.
எக்ஸர்சைஸிலேயே மிகவும் ஈஸியான நடைப்பயிற்சியை, தினமும் விடாமல் செய்யுங்கள்.
லிப்ஃட்டை தவிர்த்து படிக்கட்டை பயன்படுத்துங்கள்.
4ம் மாதம்
ஸ்டிரெஸ்ஸை விரட்டுங்கள்
தினமும் உங்களுக்கே உங்களுக்கென்று 15 நிமிடங்களாவது ஒதுக்குங்கள்.
தியானம், ப்ரணாயாமம் கற்றுக்கொள்ளுங்கள். இசையை உங்களுடைய அசைவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் சந்தோஷம், துக்கம் மற்றும் எல்லா விஷயங்களிலும், உங்கள் குடும்பம் மற்றும் ஃப்ரெண்ட்ஸ்களுடன் இணைந்து இருங்கள்.
5ம் மாதம்
மெடிக்கல் பாதுகாப்பு செய்யுங்கள்
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மெடிக்கல் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் நம்பகமான நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் எடுங்கள்.
உங்களிடம் வேலைப்பார்ப்பவர்கள் எடுத்துள்ள ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் கூட, ‘நல்ல கவரேஜ்’ கொடுக்கக்கூடியதா என்று பரிசோதியுங்கள்!
எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கென்றே தனியாக சேமித்து வையுங்கள்.
முக்கியமாக உங்கள் குடும்ப நலத்தில் அக்கறையுள்ள டாக்டரையும், மருத்துவமனையையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்!
6ம் மாதம்
குழந்தைகள் பாதுகாப்பு
உங்கள் குழந்தைகளுக்குப் போடவேண்டிய எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். குழந்தைகள் நல்ல காற்று வாங்க போவதற்குப் பதிலாக டி.வி. பார்ப்பதை நிறுத்துங்கள்.
குழந்தைகளை ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடப் பழக்குங்கள். ஏனென்றால், குழந்தையாக இருக்கும்போது பழகும் உணவுப் பழக்கம்தான் அவர்கள் பெரியவர்களாகும் போதும் தொடரும்.
குழந்தைகள் ஏதாவது ஒரு எக்ஸர்சைஸை தினமும் செய்யப் பழக்குங்கள்.
உங்கள் வீட்டு குழந்தைகளுடன் எப்போதும் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுங்கள். அதன்மூலம்தான் பிள்ளைகளிடம் திடீரென்று ஏற்படுகின்ற வித்தியாசமான மாறுதல்களைக்கூட தெரிந்து கொள்ள முடியும்! உதாரணமாக இந்த டீன் ஏஜ் வயதில் போதை, பாலியல் தொந்தரவுகள் போன்ற பிரச்னைகள்கூட உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கலாம்.
7ம் மாதம்
உங்கள் பெருமையை உணருங்கள்.
இதுவரை நீங்கள் செய்துள்ள சாதனைகளை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றி நீங்களே பெருமைப்படக்கூடிய விஷயங்களை ஒரு லிஸ்ட்டாக எழுதிப் பாருங்கள். பிறகு உங்கள் முதுகை நீங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்ப்பதே பெரிய விஷயம்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை உடல்நலத்துடன் எத்தனை மன அமைதியுடன், எத்தனை சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நினைத்து, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை அளவிட்டு மகிழுங்கள்!
நீங்கள் இதுவரை செய்த எல்லா நல்லா விஷயங்களுக்காகவும் உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள்.
உங்களைவிட பெட்டராக உங்கள் ரோலை வேறு யாராலும் செய்ய முடியாது என்பதை உணருங்கள்.
8ம் மாதம்
வருமுன் காப்பதே நலம்
கால்சியம் மற்றும் விட்டமின் ‘டி’ நிறைந்த, சத்துக்கள் சமச்சீராக உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். இது உங்களின் வயதான காலத்தில் வரும் ‘எலும்பு தேய்மான’ நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
உங்கள் வயதைப் பொறுத்து, அவ்வப்போது செய்ய வேண்டிய டெஸ்ட்களை ரெகுலராகச் செய்து கொள்ளுங்கள்.
நாற்பது வயதுக்குப் பிறகு ‘ஐ_செக்கப்’ செய்து கொள்ள மறக்காதீர்கள்.
மார்பக கேன்சரை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க சுய மார்பக பரிசோதனை செய்யக் கற்றுக் கொண்டு, அதை ரெகுலராகச் செய்யுங்கள்.
தேவைப்பட்டால் ‘மேமோகிராம்’ செய்து கொள்ளுங்கள்.
பெல்விக் மற்றும் பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்.
9ம் மாதம்
ஆன்மிகத்தில் ஆழுங்கள்
தினமும், அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களை உள்நோக்கிப் பார்த்து அலசி ஆராயுங்கள்.
முடியாதவர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபடுவதும் உங்களை நிம்மதியில் ஆழ்த்தும்.
10ம் மாதம்
மகிழ்ச்சியைப் பரவ விடுங்கள்
உங்களுடைய பாராட்டுகளை மறைத்து வைக்காதீர்கள். உங்கள் கணவரே ஆனாலும்கூட உரிய நேரத்தில் உடனே பாராட்டிவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படுவர்கள் உங்கள் வாழ்க்கையைவிட்டுச் செல்வதற்குள், அவர் உங்கள் வாழ்க்கைக்கு எந்தளவுக்கு முக்கியம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்! அப்படி தெரிந்து கொண்டதை அவரிடம் தயக்கமில்லாமல் சொல்லுங்கள். பேசாமல் மனதில் வைத்துக் கொண்டு அவர்போன பிறகு சொல்ல முடியவில்லையே என்ற யோசிப்பதைவிட வேறு வருத்தமில்லை. சம்பந்தப்பட்ட இருவருக்குமே அது பெருமகிழ்ச்சி தரும்.
மனம் திறந்த புன்னகை... இதுதான் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் உணர்ச்சியைத் தூக்கிவிடும்.
11ம் மாதம்
மருந்து, மாத்திரைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.
டாக்டர் ஆலோசனையில்லாமல் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
இருமல், ஜலதோஷம், சாதாரண ஃபீவர் இவற்றுக்கெல்லாம்கூட ஆன்டி_பயாடிக் மாத்திரை போடுவதைத் தவிருங்கள்.
உங்கள் மருத்துவரிடம் ஒவ்வொன்றுக்கும் மாத்திரைக் கேட்டு அடம்பிடிக்காதீர்கள்.
தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தூக்க மாத்திரையைத் தேடாமல், நம்முடைய பாட்டி வைத்தியத்தின்படி மிதமான சூட்டில் ஒரு கப் பால் குடியுங்கள்.
12ம் மாதம்
நீங்கள் மகிழ்வுடன் சிரித்தால், உலகமும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்!
உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள். சிரிப்பையும், சந்தோஷத்தையும் பகிர்ந்துகொள்ளும் போது அந்த அன்பு உங்களை குடும்பத்துடன் பிணைத்து வைக்கும்.
நம்மைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திலும் அதனுடைய காமெடியான பக்கத்தை கவனியுங்கள். மனசு லேசாகும்!
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் வருத்தப்படாதீர்கள்.
உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களை கணக்கெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சந்தோஷமான தருணங்களை ஞாபகப்படுத்தும்.
நோய் இருப்பதை எப்படிக் கண்டறிவது?
சமீரா ஒரு மல்ட்டி_நேஷனல் கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ்வாக பணியாற்றுகிறாள். அவளுடைய கம்பெனியில் வருடத்துக்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்யச் சொல்லுவார்கள். ஆனால் அவளுக்கு மட்டும் அதில் சிறு தயக்கம். ஏனென்றால், அப்படி மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொண்ட அவளுடைய தோழிகளில் சிலர், அதன் பிறகு டாக்டர்கள்... டெஸ்ட்கள்... என்று அலைந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் சமீராவின் பயத்தை அதிகப்படுத்தி விட்டது. ‘ஹெல்த் செக்கப்’ என்பது, உங்களுடைய உடல்நலத்தைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வதுதான்.
இந்த வேகமான உலகில், பெண்களாகிய நாம்தான் நம்முடைய ஹெல்த்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால்... நீங்கள் தொடர்ந்து ஹெல்த்தியாக இருக்க வேண்டுமென்றால்... உங்கள் உடல் நலத்தில் நீங்கள்தான் கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்கிரீனிங் டெஸ்ட் என்றால் என்ன?
உங்களுக்கு எந்தெந்த வியாதிகள் வரக்கூடிய ரிஸ்க் இருக்கிறதோ, அந்த வியாதியை ஸ்கிரீனிங் டெஸ்ட் கண்டு பிடிக்கும். எல்லா நோய்களிடமிருந்தும் வருமுன் காத்துக் கொள்ள முடியாது. ஆனால், இந்த ஸ்கிரீனிங் டெஸ்ட்டால் வியாதிகளின் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
துரதிர்ஷ்டவசமாக, பெண்கள் ரெகுலராக ஹெல்த் செக்கப் செய்து கொள்ளாததால், அவர்களுடைய நோய் முற்றிய நிலையில்தான் கண்டுபிடிக்க முடிகிறது. அதனால்தான் ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ மிகவும் முக்கியம் என்கிறேன்.
உங்களுக்கு எந்த டெஸ்ட்டுகள் தேவை?
விதவிதமான டெஸ்ட்டுகள் இருக்கும் போது, நீங்கள் செய்து கொள்ள வேண்டிய டெஸ்ட்டை, உங்களுடைய வயது... உங்கள் குடும்பத்தினர்களுக்கு இருக்கும் ஹெல்த் ப்ராப்ளம்கள்... உங்களுடைய தற்போதைய நடைமுறை வாழ்க்கையை வைத்து உங்கள் டாக்டர் தீர்மானிப்பார்.
பொதுவாக இந்தியப் பெண்களுக்கு வரக்கூடிய சில மேஜர் நோய்களுக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் தேவைப்படும்.
சிம்பிள் டெஸ்ட்கள்
உங்களுடைய வெயிட், ரத்தக் கொதிப்பு, பார்வை மற்றும் செவித்திறன் போன்றவைகளை செக்கப் செய்யும் ஸ்கிரீனிங் டெஸ்ட்கள் சிம்பிளானது. வலியில்லாதது. செலவும் அதிகமாகாது.
டீடெய்ல்டு டெஸ்ட்கள்:
மற்ற டெஸ்ட்கள் கொஞ்சம் பெரியது என்றாலும், அவைகள் உயிரைக் காப்பாற்றுவதற்கு மிகவும் முக்கியமானவை.
இந்த ரத்த பரிசோதனைகளில் முக்கியமானது
டேயபடீஸ் டெஸ்ட்
கொலஸ்ட்ரால் மற்றும் ஹை டிரைகிளிஸரைட்ஸ் டெஸ்ட்
கருப்பை வாயில் கேன்சரை கண்டுபிடிக்கும். ‘பாப் ஸ்மியர் டெஸ்ட்’ (Pap Smear Test.)
மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராபி.
கருப்பை வாயில் மற்றும் மார்பகத்தில் வரும் புற்றுநோயினால் அதிக இந்தியப் பெண்கள் பலியாகிறார்கள். இந்த புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் உயிரைக் காப்பாற்றலாம். அதனால் மேலே குறிப்பிட்டுள்ள ரத்த பரிசோதனைகள் மற்றும் கேன்சருக்கான டெஸ்ட்டுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்து கொள்வது நல்லது.
உங்கள் வயதைப் பொறுத்துதான், நீங்கள் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்ய வேண்டுமென்று உங்கள் டாக்டர் அறிவுறுத்துவார்.
பெண்களுக்கு 25 வயதுக்கு மேல் ஆனால் ஒவ்வொரு வருடமும் ‘பாப்ஸ்மியர்’ செய்து கொள்ள வேண்டும்.
45 ன் ஆரம்பத்தில், ஒன்று அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை ‘மேமோகிராம்’ செய்து கொள்ள வேண்டும்.
65 வயதிற்குமேல் கண், காது, எலும்புத் தேய்மானம், மனச்சிதைவு, மனச்சோர்வு, சிறுநீரகப் பிரச்னை போன்றவைகளுக்கான டெஸ்ட்களைச் செய்து கொள்ள வேண்டும்.
உடற்பரிசோதனை:
உடற்பரிசோதனையைப் பொறுத்த வரைக்கும் உச்சி முதல் பாதம் வரை ஒரு மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஹெல்த் செக்கப் என்பது, லேபுக்குச் சென்று நிறைய ரத்த பரிசோதனைகளைச் செய்து கொள்வது மட்டுமல்ல... உடற்பரிசோதனை இல்லாமல், செய்யும் இந்த ரத்த பரிசோதனையால் நம்மிடையே ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
0 comments:
Post a Comment