Ads Header

Pages


21 May 2012

கால்களை கவனியுங்கள்!

பெண்களுக்கு முக அழகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு கால் அழகும், பாதங்களின் அழகும் முக்கியம். ஆனால், துரதிருஷ்டவசமாக பெண்கள் முகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பாதங்களுக்குத் தருவதில்லை. இதை சில திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தால் ராஜகுமாரி ஆனால் பாதத்தைப் பார்த்தால் வேலைக்காரி என்று மற்றவர் கேலிசெய்யும் அளவிற்கு இருக்கக்கூடாது.

நமது உடலின் நரம்புகள் முடிவடையும் இடம் பாதங்கள்தாம். எனவே, கால்களை நன்கு பராமரிப்பது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்காகவும்தான் என்பதை உணர்ந்து, பெண்கள் கால்கள் பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் பெண், ஆயிரக்கணக்கான ரூபாய் விலையுள்ள பட்டுப்புடவையைக் கட்டியிருக்கும் பெண்களின் பாதங்கள் அழகில்லாமலும், வெடிப்புக்களோடும் இருப்பதை நாம் பலபேரிடம் பார்க்க முடிகிறது. பாதங்களின் மீதும் பெண்கள் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கால்களை கவனியுங்கள்

கால்கள் பல இடங்களுக்கும் செல்கின்றன, சேற்றிலும், தண்ணீரிலும், சூடான இடத்திலும், குளிர்ந்த இடத்திலும் நடக்கின்றன. எனவே ஏராளமான அழுக்குகள், கறைகள் பாதங்களில் படிவதைத் தவிர்க்க முடியாது. கோயிலுக்குச் சென்று வந்தவுடன் பாதங்களைப் பாருங்கள், அழுக்கும், எண்ணெய்ப் பசையும் கவ்விக் கொண்டிருப்பதைக் காணலாம். மேலும் பாதங்களில் கால் ஆணி, பித்தவெடிப்பு, வறண்ட தோற்றம் என்று ஏராளமான பிரச்சினைகள் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே கால்களை, மற்றும் பாதங்களை நன்றாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். நாள் முழுவதும் கண்ணாடி முன்னால் நின்று ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள், வாரத்தில் ஒருமணி நேரமாவது கால்களை கவனிப்பதில் செலவழிப்பது நல்லது.

அழகான பாதங்களைப் பெற எளிய வழி

அகலமான பிளாஸ்டிக் டப்பில் இளஞ்சூடான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சில சொட்டுக்கள் திரவ சோப்பைக் கலந்து கொள்ளவும், பிறகு இரண்டு பாதங்களையும் நீரில் மூழ்கி இருக்கும்படியாகச் செய்து, பத்து நிமிடங்கள் வரையில் இருக்கவும், கால்கள் இறந்து போன செல்களினால் வறண்டு போய் காணப்படும். இவ்வாறு சோப்புத் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலமாக மேல் தோலில் உள்ள இறந்த செல்கள் அப்புறப்படுத்த எளிதாக மாறிவிடும். பத்து நிமிடம் பாதங்கள் ஊறிய பிறகு, பல்தேய்க்கும் பிரஷ் கொண்டு பாதங்களை, விரல் இடுக்குகளை மெதுவாக தேய்த்து விடுங்கள். இதனால் கால்களில் படிந்திருக்கும் அழுக்கு, தூசு, இறந்த செல்கள், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஆகியவை வெளியேறும். பாதங்கள் பளபளப்பாகவும், அழகாகவும் தோற்றம் அளிக்கும், நோய்க் கிருமிகளும் தொலைந்து போகும்.

பாதுகாப்பும் பயிற்சிகளும்

வாரத்தில் ஒரு முறையாவது பாதங்களை கழுவித் துடைத்தும், நகங்களை வெட்டியும், பாதுகாப்பது அவசியம். இது நம்மை நாள் முழுவதும் தாங்கிக் கொண்டிருக்கும் பாதங்களுக்கு நன்றிக்கடனாக அமைவதோடு, அவைகளை புத்துணர்ச்சி கொள்ளவும், வேலை செய்வதற்குத் தயாராக்கவும் பெரிதும் உதவும்.

1. பெரிய பிளாஸ்டிக் டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு சொட்டு ஏதாவது மனதிற்குப் பிடித்த மூலிகை எண்ணெயைக் கலந்து, அந்தத் தண்ணீரில் பாதங்களை பத்து நிமிடத்திற்கு மூழ்கும்படியாக வைத்திருக்கவும். இவ்வாறு செய்தால் பாதங்கள் மிருதுவாகும்.

2. பாதங்கள் நன்றாக உலர்ந்த பிறகு, விரல் நகங்களை மென்மையாக ராவி விடவும்.

3. பாதங்களை பியூமைஸ் கல்லைக் கொண்டு நன்றாகத் தேய்த்து விடவும். இதனால் மேல் தோலில் படிந்திருக்கும் இறந்த செல்கள் அகன்று, பாதங்கள் பளிச்சிடும். இளமையாகத் தோன்றும்.

4. பாதங்களுக்கு குளிர்ச்சியைத் தருகின்ற எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு, பாதங்களை நன்றாக மசாஜ் செய்யவும், விரல்களில் இருந்து ஆரம்பித்து, சக்கரவட்டமாக எண்ணெயை பாதங்களில் தேய்த்துக் கொண்டே வந்து, குதிகாலில் முடிக்கவும்.

5. முன் பாதத்தை விரல்களோடு சேர்த்து உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு, லேசாக வலதுபுறம் நான்கு முறையும், அவ்வாறே இடதுபுறம் நான்கு முறையும் திரும்பவும். இவ்வாறு செய்வது, பாதங்களில் அக்கு பிரஷர் மையங்களைத் தூண்டிவிட்டு, இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.

6. தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு, கால்களை தலையை விட உயரமாக இருக்கும் விதத்தில் தலையணியின் மீது வைத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வது வலியைக் குறைக்கும், கால்களின் தசை இறுக்கத்தை நீக்கும்.

பராமரிப்பு

பாதத்தில் வெடிப்புக்கள் இருந்தால் துணி துவைக்கும் கல்லிலோ அல்லது வேறு ஏதாவது சிறிய கல்லிலோ பாதங்களை மெதுவாக தேய்த்துக் கொள்வது நல்லது. கல் இல்லாதவர்கள் துணிதுவைக்கும் பிரஷ் கொண்டு தேய்த்துக் கொள்ளலாம். தற்போது கடைகளில் புயூமைஸ் ஸ்டோன் (ஜீuனீவீநீமீ stஷீஸீமீ) என்று விற்கப்படும் கல்லை வாங்கி பயன்படுத்தலாம்.

குளிக்கும் போது சிறிது நல்லெண்ணெயை உள்ளங்காலில் வைத்து, சூடுபரக்க தேய்த்து விட்டுக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியபிறகு சீயக்காய் பொடி அல்லது பயத்தமாவைக் கொண்டு கழுவிவிட வேண்டும். பாதத்திற்கு எண்ணெய் தேய்ப்பதைப்போலவே கால்விரல்களுக்கும் தடவிக் கொள்வது நல்லது. இதனால் கால்விரல்களின் சருமம் பளபளப்பாகும்.

பாத எரிச்சல் நீங்க

சிலருக்கு உடல்சூடு அதிகமாகும் போது பாத எரிச்சல் உண்டாகும். அந்த சமயங்களில் மருதாணி இலையை அரைத்து படுக்கப்போகும் நேரத்தில் உள்ளங்காலில் தடவிக் கொண்டு படுப்பது உடல் சூட்டைத் தணிக்கும். எரிச்சலை அடக்கும். பாதங்களில் ஏற்பட்ட உஷ்ணம் குறைக்கும். உடல் குளிர்ச்சி அடையும். இதேபோலவே பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களிலும் மருதாணியைத் தடவிக் கொள்ளலாம்.

பாத எரிச்சல் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை மைபோல அரைத்து, அரிசிமாவுடன் கலந்து, தேவையான உப்பு போட்டு, தோசைவார்த்துச் சாப்பிட, எரிச்சல் நீங்கும்.

1 comments:

அம்பாளடியாள் said...

பயனுள்ள அருமையான தகவல்.பகிர்வுக்கு
மிக்க நன்றி மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner