Ads Header

Pages


11 May 2012

காய கல்ப மூலிகை, சஞ்சீவி மூலிகை துளசி!

துளசிக்கு தெய்வீக மூலிகை, காய கல்ப மூலிகை சஞ்சீவி மூலிகை என்ற சிறப்புத் தன்மை உண்டு. துளசி உளப்பிணிகளையும், உடல் பிணிகளையும் அறவே நீக்கும் தன்மை கொண்டது. உடம்பில் உள்ள அனைத்துப் பகுதி எலும்புகளையும், தசைகளையும், தோல்பகுதியையும் கொடிய நோய்களில் இருந்து பாதுகாப்பும் நிவாரணமும் கொடுக்கிறது. மூளை நரம்புகள் முறையாகச் செயல்படும்படி செய்து மூளைக்குப் பாதுகாப்பைத் தருகிறது. இதயத்தில் தோன்றும் படபடப்பையும் கலக்கத்தையும் நிவர்த்தி செய்து இரத்த ஓட்டத்தைச் செம்மைப்படுத்துகிறது.

துளசிச்செடி கரியமிலவாயுவை அதிகம் கிரகித்துக் கொண்டு பிராண வாயுவை நமக்குத் தருகிறது. காற்றின் மூலம் பரவும் விஷக் கிருமிகள் துளசிச் செடியில் பட்டாலே அழிந்து விடுகின்றன.

துளசிச்செடியின் மணத்தை சுவாசித்தாலும் சளி, இருமல் குறையும்.

துளசி கபத்தைப் போக்கும். இருமலை நீக்கும். சாதாரண காய்ச்சல் முதல் மலேரியா, நிமோனியா, டிராங்கியல் நிமோனியா, இன்புளூயன்சா போன்ற காய்ச்சல்களை நிவர்த்தி செய்யும்.

கபமானது நெஞ்சில் கட்டிக்கொண்டு தொல்லை கொடுக்கும்போது, துளசியை இடித்துச் சாறு எடுத்து 1_2 தேக்கரண்டியளவு சாப்பிட்டால், ஆறு வேளை மருந்தில் நெஞ்சுச் சளி கரைந்து வெளியேறி விடும். அதிகாலையில் வெறும் வயிற்றில் பத்து துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் இரத்தம் சுத்தியாகும். இரத்தத்தில் உள்ள விஷக் கிருமிகள் அழிந்துவிடும். இரைப்பையின் கோளாறுகளும் நீங்கிவிடும். 150 மில்லி துளசிச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சர்பத்து தயாரித்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால், மூளை நரம்புகள் முறையாகச் செயல்படும். பெண்கள் தினமும் 20 துளசி இலைகளைக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை தொடர்பான வியாதிகள் வராது.

அனைத்துவகையான நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள, ஒரு செப்புப் பாத்திரத்தில் ஒரு கைப்பிடியளவு துளசி இலையைப் போட்டு, ஒரு டம்ளர் குடி நீரை விட்டு இரவு ஊறவைக்க வேண்டும். எட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் 60 மில்லியளவு குடித்துவர வேண்டும். எந்தவித நோய்களும் வராது. வந்தாலும் நிவர்த்தியாகிவிடும். நீடித்த நோய்களுக்கு மூன்று மாதம் வரை இந்தத் துளசி நீர் சாப்பிடலாம். இந்த ஊறல் குடி நீர் சாப்பிட்டு வரும் போது உடல் பொன்நிறமாகும். தோலில் சுருக்கம் இருக்காது இளமைத்தோற்றம் நீடிக்கும்.

கருத்த நிறம் சிவப்பாக மாற வேண்டுமானால் துளசி இலை, இதன் வேர் முருங்கையின் பசுமையான வேர் ஆகியவற்றைச் சமமாக சேகரித்து வைத்து, நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். வழக்கம் போல் குளித்து விட்டு நன்றாகத்துடைத்து விட்டு, மேற்கண்ட விழுதை உடம்பு பூராவும் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் குளிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு மாதங்கள் குளித்து வந்தால் கருமை நிறம் மாறி, மாநிறமாகவோ, இளம் சிவப்பு நிறமாகவோ ஆகிவிடும். தோல் பொன் நிறமாக இருக்கும். துளசி இலையை இரண்டு கைப்பிடியளவு எடுத்து நன்றாக அரைத்து 100 மில்லி மோரில் கலந்து சாப்பிட்டால், நீர்த்தாரை எரிச்சல் மூன்று வேளை மருந்தில் குணமாகும்.

துளசி இலை கைப்பிடியளவு, சிறிதளவு கற்கண்டு, 4 தேக்கரண்டியளவு தேன் கலந்து இவை வதங்கும்வரை வதக்கி, 600 மில்லி தண்ணீர் விட்டு 200 மில்லியளவு சுண்டக்காய்ச்சி 4 தேக்கரண்டியளவு, தினம் 4 வேளை சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.

கைப்பிடியளவு துளசி இலையுடன் 20 மிளகு சேர்த்து மை போல் அரைத்து, பட்டாணியளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, காய்ச்சல் வரும் போது காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்.

நிமோனியாக் காய்ச்சலுக்கு, துளசி இலை, வல்லாரை இலை இவை ஒவ்வொன்றிலும் கைப்பிடியளவு எடுத்து 10 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து, மிளகு அளவில் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, நிமோனியாக் காய்ச்சல் உள்ளபோது தினம் மூன்று வேளை இந்த மாத்திரையைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்.

துளசி இலை 10 கிராம், மிளகுத்தூள் 10 கிராம், பாகல் இலை 10 கிராம், கடுகரோகினி 40 கிராம் இவைகளை நன்றாக அரைத்து மிளகளவு மாத்திரை செய்து உலர்த்தி, காலை, மாலை ஒரு மாத்திரை கொடுத்து வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். துளசி இலைத்தூள் சுக்குத்தூள், ஓமம் சமம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இன்புளுயன்சா காய்ச்சல் குணமாகும்.

துளசி விதையைப் பொடித்து 5_10 வரை தினமும் உட்கொண்டுவந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

துளசி வேரைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினமும் மாலை வேளையில் நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வேரின் சக்தி மிக விரைவில் இரத்தத்தில் கலந்து, இரவு நேரத்தில் தாம்பத்திய உறவை மேம்படுத்தும்.

துளசி இலையை எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்து படர்தாமரை உள்ள பகுதியில் போட்டு வந்தால் படர்தாமரை குணமாகும்.

பேன் தொல்லையில் இருந்து விடுபடவேண்டுமானால், இரவு படுக்கும்போது துளசி இலைகளைத் தலையணை போல் நன்கு பரப்பி இதில் படும்படி தலை வைத்துப்படுத்திருந்தால் இலையின் வாடைதாங்காமல் பேன்கள் கீழே விழுந்துவிடும்.

இரவு நேரத்தூக்கத்தில் விந்து வெளிவரும் இயல்புடையவர்கள், துளசி வேரைப் பொடி செய்து 5 கிராம் அளவில் எடுத்து வெற்றிலையில் வைத்துத் தின்று வந்தால் மூன்று தினங்களில் விந்து கட்டுப்படும்.

துளசி இலைச் சாறு, தூதுவளைச் சாறு வகைக்கு 60 மில்லி, தேன் 90 மில்லியில் கலந்து வேளைக்குப் பத்து மில்லி வீதம் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சலதோஷம், மூக்கில் நீர் வடிதல், தொடர்ந்து தும்மல் கண், மூக்கில் நீர்வடிதல் போன்ற உபாதைகள் நிவர்த்தியாகும்.

துளசி இலைச்சாறு 5 துளியளவு எடுத்து தாய்பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளித் தொல்லை நீங்கிவிடும்.

துளசி வேரும், சுக்கும் சமஅளவு எடுத்து மை போல் அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். துளசி இலை 10ம் இரண்டு சிட்டிகை ஓமமும் சேர்த்து அரைத்து 100 மில்லி தண்ணீரில் கலக்கிச் சாப்பிட்டால் அம்மை நோய்கண்டவர்களுக்கு ஏற்படும். கடுமை குறையும்.

துளசி இலைச்சாறு 30 மில்லியில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்து தினமும் காலையில் ஒரு வேளை கொடுத்து வந்தால் ஆரம்ப நிலையில் உள்ள காக்கை வலிப்பு குணமாகும். வலிப்பு வரும்போது இச்சாற்றை மூக்கில் விட்டால் வலிப்பு உடனே நிற்கும். துளசிப்பொடி, வேப்பம்பூம்பொடி, நாவல் கொட்டைப்பொடி நெல்லிக்காய்ப்பொடி இவற்றைச் சமமாகச் சேர்த்து தினசரி அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதத்தில் நீரிழிவு கட்டுப்படும்.

பிரைமரி காம்ப்ளக்ஸ் நோயும் இதன் விளைவாக ஏற்படும் தொண்டைச் சளி இருமலுக்கும் ஆறிய வெந்நீரில் துளசி இலை 10 போட்டு, இரவு வைத்திருந்து காலை, மாலை அரை டம்ளர் தண்ணீரைக் குடிக்கச் செய்தால் சில தினங்களில் நோய்க் கடுமை தணியும். துளசி இலைச்சாறும், ஆடா தொடை இலைச்சாறும் சமமாகக் கலந்து, தினம் இரண்டு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் சலதோஷம் நீங்கி விடும். அனைத்து வாயுத் தொல்லைகளுக்கும், மாலைக் கண் நோய்க்கும், கண்பார்வை தெளிவடையவும் துளசிச்சாறு பருகி வருவதால் நிவர்த்தியாகிறது.

துளசி விதையைப் பொடியாக்கி பாலில் கலந்து கொடுத்தால் வாந்திபேதி குணமாகும். தேள் கொட்டிய இடத்தில் துளசி இலையைக் கசக்கித் தேய்த்து கொட்டிய இடத்தில் துளசியை வைத்து, சிறிது சூடுகாட்டினால் கடுப்பும் வலியும் நீங்கும்.

துளசிச் சாற்றில் இதன் பூக்கள், காம்புகள் சுக்கு ஆகியவற்றைச் சிறிது தேன் விட்டு கலந்து கொடுத்தால் பாம்புக்கடி விஷம் தீரும்.

துளசி இலையை இரண்டு கைப்பிடியாக மென்று தின்று, கடிவாயில் துளசியை அரைத்து வைத்துக் கட்டினாலும் விஷம் முறிந்து விடும். கடிபட்டவர் வாய்வழியாகத் தின்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டால் உச்சந்தலையில் ரத்தம் வரும் வரை கீறிவிட்டுத் துளசி அரைத்த விழுதை வைத்துக் கட்டியும், மூக்கிலும், வாயிலும் துளசிச் சாற்றை விட்டும் வந்தால் பாம்பு நஞ்சு முறிந்து விடும்.

துளசியைப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒருதேக்கரண்டி வீதம், வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டால், மண்டைப்பீனிசம் அடுக்குத்தும்மல், இருமல் சளி, தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு முதலிய நோய்கள் தீரும். துளசி மருத்துவம் செலவில்லாதது. எளிய முறையில் பயன்படக் கூடியது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner