Ads Header

Pages


02 May 2012

சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்கள்! இயற்கை தரும் இளமை வரம்!

நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம்..

ஒல்லியாக இருப்பவர்களுக்கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப் பூசுங்கள். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற் போலவும் காட்டும்.

ஒட்டிய கன்னங்கள், மொழுமொழுவென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ்பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங்கள். தடவிக் கொண்டிருக்கும்போதே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம்!

''எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே..'' என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப்போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் 'பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் 'ப்ளீச்' செய்ததுபோல முகம் பளிச்சென்று இருக்கும்.

'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதே..' என்று கவலைப்படுகிறவர்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'.

ஒரு டீஸ்பூன் சப் போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து, தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்-கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந்தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக்கும்.

கண்டிஷனராகவும் கலக்குகிறது சப்போட்டா. காயவைத்த சப்போட்டா தோல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம்.. இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம்.. என எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்த பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி முடி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத்தன்மை நீங்கி, பளபளப்பு கூடும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளியுங்கள். தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்!

சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தந்து, சிறந்த நோய் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது. 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மி.கிராம் கால்சியமும், 27 மி.கிராம் பாஸ்பரஸூம் இருக்கிறது.

தினமும் 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப் பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.

பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப்போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும்.

சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும்.சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸை குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் கண்களை தழுவும்.

பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner