Ads Header

Pages


01 May 2012

வெள்ளரிக்காயின் பயன்கள்! - ஹெல்த் ஸ்பெஷல்!

கோடையில் நம்மை தாக்கும் வெயில், வெம்மை, நாவறட்சி போன்ற பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல முறைகளைக் கையாள்கிறோம். குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை வெல்ல முடிவதில்லை. கோடைத் தொல்லைகளை எளிதில் வெல்லுவதற்கு மிகவும் உதவி புரிவது வெள்ளரிக்காய் பிஞ்சுகளாகும். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது, வெள்ளரிக்காய்.

தாவரம்

வெள்ளரிக்காயின் தன்மைகளை, பயன்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பேயே இதைப் பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உரைக்கின்றன. வட இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட வெள்ளரிக்காய் இன்று இந்தியா முழுவதும் பரவி உள்ளது.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மட்டுமின்றி புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி உள்ளன.

வெள்ளரிக்காயை குறிக்கும் பல்வேறு மொழிப்பெயர்கள்

ஆங்கிலம் _ குக்கும்பர், சமஸ்கிருதம்_ ஷகுலா, இந்தி_கங்க்ரி, வங்காளம் _ சிரா, குஜராத் _ காக்ரி, தெலுங்கு _ டொஸெகாயா, கன்னடம்_ சாதெக்காயி, அரபு _ பாஸாருவா.

வெள்ளரிக்காய் தாவரவியலில் ‘குக்குமிஸ் சாட்டைவஸ்’ என அழைக்கப்படுகிறது. இது ‘குக்குர்பிட்டேசியே’ என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

தமிழ்ப்பெயர்கள்

ஊர்வரப்பன

கூதாரி

படோலிகை

விரலி

கொடுங்காய்

வெள்ளரிக்காயை எப்படி சாப்பிடலாம்

வெள்ளரிக்காயை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கோடைக்காலத்தில் வீணாகப் பணத்தைச் செலவு செய்து ஜூஸ், செயற்கை இனிப்பு ஊட்டப்பட்ட பானங்களை வாங்கி அருந்துவதால், உண்மையிலேயே தாகம் தீராது. மாறாக வெள்ளரிக் காயை உண்பது சிக்கனம் மட்டுமின்றி தாகத்தையும், வெம்மையையும் தீர்க்கும் ஒரே வழியாகும். வெள்ளரிக்காயை பிஞ்சாக உண்ணலாம். பழமாக உண்ணலாம். பழக்கூழாக உண்ணலாம், சாறாக அருந்தலாம். மிக்சி யிலிட்டு அரைத்து உண்ணலாம். உலர வைத்து உண்ணலாம். இளநீரில் கலந்து அருந்தலாம். கூட்டு, குழம்பு வைத்து உண்ணலாம். ஆனால், பச்சையாக உண்பது தான் சிறப்பு ஆகும்.

வெள்ளரிக்காயின் சிறப்புத் தன்மைகள்

வெள்ளரிக்காய் இளநீர், நுங்கு போன்று இயற்கையான ஒரு குளிர்ச்சி தரும் இயற்கையான தாவரப் பொருளாகும். வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வயிற்றில் அஜீரணத்தை நீக்கி ஜீரணத்தைப் பெருக்கும். பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும். வெள்ளரிக்காய் வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும். உடல் வெம்மையை நீக்கும். கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல், தலை சூடு இவற்றைத் தணிக்க வெள்ளரிக்காயை விஞ்சுவதற்கு வேறு எதுவுமே இல்லை.

மருத்துவப் பயன்கள்

« வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும்.

« வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறிய பின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும்.

« வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும்.

« வெள்ளரிப் பழத்தை அரைத்து பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.

« வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.

« இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

« வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.

« வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.

« தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.

« வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.

« வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும்.

« வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

« வெள்ளரிக்காயைத் தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner