
பாட்டி வைத்தியம்
சீதோஷணம் மார்ற சமயத்துல குழந்தை கள், வயசானவங்கனு பலருக்கும் சட்டுனு சளி பிடிச்சுடும். அதுக்கு தூதுவளை கஷாயம் கண்கண்ட மருந்து. கொஞ்சம் கசப்பாதான் இருக்கும். ஆனா, மூணு வேளை குடிச்சதுமே நெஞ்சு சளி நீங்கி சுகமாயிடும். சரி, தூதுவளை கஷாயம் எப்படி தயாரிக்கறதுன்னு கேக்கறீங்களா?
ஒரு கைப்பிடி அளவு தூதுவளையை அலம்பி எடுத்து, ஒரு டம்ளர் தண்ணில போடுங்க. அதோட அரை டீஸ்பூன் மிளகுத்தூள் போட்டு அடுப்புல வெய்யுங்க. தண்ணி கொதிச்சு அரை டம்ளர் ஆகற வரைக்கும் விட்டுவச்சு, இறக்கி ஆறினதும் ஒரு சிட்டிகை கல் உப்பு போட்டு குடிக்க வேண்டியது தான்.
சின்னக் குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுக்கலாம்.
ஜலதோஷம், கபத்தை கட்டோட அறுத்து நீக்கறதுல கற்பூரவல்லி கில்லாடி!
தூதுவளை கஷாயம் மாதிரியே கற்பூர வல்லி இலையைப் போட்டும் கஷாயம் பண்ணி குடிக்கலாம். பெரியவங்க இதுல பச்சடி பண்ணி ஒருவாட்டி சாப்பிட்டு பார்த்தாங்கன்னா, விடவே மாட்டாங்க. ஜலதோஷம் இல்லாட்டிகூட வீட்டுல தினம் தினம் கற்பூரவல்லி பச்சடியாத்தான் இருக்கும். அந்தளவு அதுல சுவையும் மணமுமா இருக்கும்.
சரி... பச்சடி எப்படி பண்றதுன்னு சொல்றேன். ஒரு கைப்பிடியளவு கற்பூரவல்லி இலையை எடுத்து அலம்பி, பொடிப்பொடியா நறுக்கி, புளிக்காத தயிர்ல போட்டுக்கணும். தேவையான அளவு உப்பு சேருங்க. சின்னதா ஒரு பச்சை மிளகாய், கடுகு தாளிச்சு கொட்டினா... வத்தக்குழம்புக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட ஜோரா இருக்கும். சளியாவது... தும்மலாவது! கிட்டவே அண்டாது.
வியாதிக் கிருமிங்க உடம்பை அண்ட விடாம கோட்டை மாதிரி காக்கறதுல இஞ்சிக்கு மிஞ்சி எதுவுமில்ல! அந்தக் காலத்துல நாங்க காலைல நாலு மணிக்கு எழுந்ததும் இஞ்சிக் காப்பிதான் குடிப்போம். அதான் இந்த வயசுலயும் நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா இருக்கேன்.
விரல் நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கிட்டு நசுக்கி, சாறு எடுத்துக்கோங்க. சட்டில ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு வறுத்து சர்க்கரை சிவந்ததும் இஞ்சிச் சாறை விடணும். சர்க்கரை முதல்ல கெட்டியாகி அப்புறம் கரைஞ்சதும் அடுப்புலருந்து இறக்கி, அரை டம்ளர் பால் சேர்த்து குடிக்கணும்.
இந்த இஞ்சிக் காப்பி உடம்புக்கு நல்ல வலு கொடுக்கும். நல்லா பசியும் எடுக்கும்.
சீரகத்தை சமையல்ல எவ்வளவுக்கு எவ்வளவு சேர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது! இது வாத நோயை கட்டுப்படுத்தும். பசியை அதிகரிக்கும். வயிறு உப்புசம், தலை கிறுகிறுப்பு மாதிரியானவற்றுக்கு அருமருந்து சீரகம்தான்.
பிள்ளைத் தாய்ச்சிப் பெண்களுக்கு வலி எடுத்தா, முதல்ல சீரக கஷாயம்தான் பண்ணி கொடுப்போம். ரெண்டு ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலில போட்டு வறுத்து, அரை டம்ளர் தண்ணி ஊத்தி, அது கால் டம்ளரா சுண்டினதும் வடிச்செடுத்து சர்க்கரை போட்டுக் குடிக்கக் கொடுத்தா, பொய் வலின்னா உடனே மட்டுப்பட்டு உடம்பு நார்மல் ஆயிடும். பிரசவ வலின்னா இந்த கஷாயம் குடிச்சதும் வலி தீவிரப்படும். அந்தளவு சக்தி நிறைஞ்சது சீரகம்
0 comments:
Post a Comment