Ads Header

Pages


05 May 2012

வழக்கு எண் 18/9 - திரை விமர்சனம்

சென்னை, மே 5 (டிஎன்எஸ்) பணம் என்னவெல்லாம் செய்யும், அந்த பணம் இல்லாத அப்பாவி கீழ் தட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற்றொர்கள் கொடுக்கும் பணமும், செல்லமும் அவர்களை எப்படிப்பட விபரீத செயலில் ஈடுபட வைக்கிறது என்பதையும் சுத்தியலில் அடித்தாற்போல் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இப்படம் சினிமா ரசிகர்களுக்கு வெறும் படமாக மட்டும் இன்றி ஒரு பாடமாகவும், அதே சமயம் பெற்றொர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் மீது ஒருவன் ஆசிட் வீசிவிட, குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது. யார் மீதாவாது சந்தேகம் இருக்கிறதா என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவிடம் கேட்க, அவர் தனது பெண்ணை ஒரு தலையாக காதலித்த தெரு வண்டிக்கடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயை கைகாட்டுகிறார். ஸ்ரீயை அழைத்து போலீஸ் தனது விசாரனையை ஆரம்பிக்க, வாழ்க்கையில் ஒருவன் எந்த எந்த துண்பத்தையெல்லாம் அனுபவிக்க கூடாதோ, அப்படிபட்ட துன்பங்களையெல்லாம் அனுபவித்து, இறுதியில் சென்னை வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயின் கதையை கேட்டு போலீஸே அனுதாபப்படுகிறது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வேலைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் பெண்ணான பள்ளி மாணவி ஸ்ரீ யை விசாரித்த போலீஸிடம் "சார் இந்த பையனை விசாரித்தது போல மற்றொருவனையும் விசாரிக்கணும்" என்று சொல்கிறார். ஏன் அவனை விசாரிக்க வேண்டும் என்று போலீசாரின் கேள்விக்கு அந்த மாணவி தனது கதையை விவரிக்க ஆரம்பித்ததும் தொடர்கிறது மற்றொரு பகுதி. இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்து மிக நேர்த்த்தியான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பணம் படைத்த மேல்தட்டு வர்க்கத்தினால் கீழ்தட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருப்பதுதான் க்ளைமாக்ஸ்.

இரண்டு கதைகளாக நகரும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. பத்திரிகைகளில் சாதரணாம படித்து விட்டு செல்லும் செய்திக்குப் பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பதை மிக ஆழமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவருமே நடிப்பில் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் வேலு கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீயின் தோற்றமும், அவருடைய நடிப்பும் அந்த கதாபாத்திரதை படம் முடிந்தும் நம் கண்ணை விட்ட அகலாமல் பார்த்துக்கொள்கிறது. வீட்டு வேலை செய்யும் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த ஊர்மிளா மகந்தாவுக்கு வசனங்கள் இல்லை என்றாலும் அவருடைய கண்களே பெரும் அளவுக்கு நடித்திருக்கிறது. அதேபோல பள்ளி மாணவனாகவும், மாணவியாகவும் நடித்த நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது போல நடித்திருக்கிறார்கள்.

போலீஸாக நடித்த குமாரவேலு அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். பள்ளி மாணவர்களை பிடித்து கண்டிப்பது, ஜோதியின் முகத்தில் ஆசிட் அடித்தவனை கண்டுபிடிப்பது என ரசிகர்களின் மனதில் நல்ல போலீஸாக இடம்பிடிக்கும் குமாரவேலு, இறுதியில் கெட்ட போலீசாக இடம்பிடிக்கிறார். சின்னசாமி கதாபாத்திரத்தில் நடித்த சிவனும் நம்மை கவனிக்க வைக்கிறான்.

உருத்தாத எந்தவித ஒளியையும் பயன்படுத்தாமல் அற்புதமான ஓளிப்பதிவை கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன். ஸ்டில் கேமராவில் படமாக்கப்பட்ட படமாம் இது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அமைதியான, அழகான மெட்டுக்களைப் போட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னா, பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு ரசிகர்களுக்கு எந்த வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், இரண்டு பகுதிகளாக நகரும் காட்சிகளை துள்ளியமாக வெட்டியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் படமாக அமையும். அந்த அளவுக்கு ரசிகர்களின் அடிமனதில் பதியும் அளவுக்கு இப்படத்தை செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

குடுபத்தோடு பார்க்க வேண்டிய இப்படம் வழக்காக இல்லாமல் ரசிக்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும்.

ஜெ.சுகுமார்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner