Ads Header

Pages


15 March 2012

அடை உப்புமா-கும்பகோணம் கடப்பா - வெண்டைக்காய் தோசை- மைதாதயிர் போண்டா வாசுகிகள் கைமணம்!

அடை உப்புமா


தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், உளுந்து, கடலைப்பருப்பு, தேங்காய் எண்ணெய் - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 7, கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, சீரகம், பெருங்காயம் - சிறிதளவு, துருவிய தேங்காய் - கால் மூடி, வெங்காயம் (நறுக்கியது) - 1, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு, சீரகம் சேர்த்து கெட்டியாக தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
அடி கனமான கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து உதிர் உதிர் ஆக உப்புமா பதம் வரும் வரை கிளறவும். பொடித்த வேர்க்கடலையைத் தூவி இறக்கவும்.
அடை உப்புமா: பருப்புக் கலவையுடன் பச்சைப் பயறையும் சேர்த்துக் கொண்டால் அதிக சத்து கிடைக்கும்அடை உப்புமா: பருப்புக் கலவையுடன் பச்சைப் பயறையும் சேர்த்துக் கொண்டால் அதிக சத்து கிடைக்கும்

------------------------------------------------------------------

கும்பகோணம் கடப்பா

தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு - 1, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை - சிறிதளவு, எண்ணெய் - 2 ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.



செய்முறை: பயத்தம்பருப்பை வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மிளகாய் வாசனை போனதும், வேக வைத்த பயத்தம்பருப்பு, வேக வைத்து மசித்த உருளைகிழங்கை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பிரிஞ்சி இலை, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
கும்பகோணம் கடப்பா: நன்றாக செய்ய வருகிறது... டேஸ்ட்டும் அபாரம்!
----------------------------------------------------------------

வாவ்... வெண்டைக்காய் தோசை!

வெண்டைக்காய் தோசை

தேவையானவை: வெண்டைக்காய் - 150 கிராம், புழுங்கலரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சித் துண்டு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 15, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, வெண்டைக்காய், இஞ்சி, பூண்டு, உப்பு, பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த மாவில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். தோசை மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தோசைக் கல்லை காயவைத்து, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.


தேங்காய் சட்னி இதற்குப் பொருத்தமாக இருக்கும்.
வெண்டைக்காய் தோசை: வெண்டைக்காயை அரைத்து சேர்க்காமல், பொடியாக நறுக்கி எண்ணெயில் லேசாக வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
மைதாதயிர் போண்டா


தேவையானவை: மைதா மாவு - 2 கப், புளித்த தயிர் - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சீரகம், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு, சமையல் சோடா ஆகியவற்றை மைதா மாவுடன் கலந்து, புளித்த தயிரை சிறிது சிறிதாக விட்டு, போண்டா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.
மைதா - தயிர் போண்டா: மைதா வுடன் சிறிது ரவை, ஊற வைத்த பருப்பு வகைகளைக் கலந்து செய்து செய்தால் வாசனையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------
வெஜ் மசாலா ஸ்பெஷல் ரைஸ்


தேவையானவை: பாஸ்மதி அரிசி (வடித்து உதிர்த்தது) - 4 கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய முட்டை கோஸ், ஆய்ந்த புதினா - தலா ஒரு கப், பச்சைப் பட்டாணி - அரை கப், வெங்காயம் - 2, கீறிய பச்சை மிளகாய் - 2, தக்காளி - 4, இஞ்சி - முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: பிரிஞ்சி இலை - 2, பட்டைத் துண்டு - 2, ஏலக்காய், கிராம்பு - தலா 4, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்துத் தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை எண்ணெய் விட்டு தாளித்து, இஞ்சி - முந்திரி விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், பட்டாணி, கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிரேவி போல் வந்ததும், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். புதினா போட்டு புரட்டி இறக்கவும்.

இதில் வடித்த சாதத்தைப் போட்டு மெதுவாகக் கிளறி, பொரித்த உருளை துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
வெஜ் மசாலா ஸ்பெஷல் ரைஸ்: உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்தால் இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner