லட்டு!
தேவையான பொருள்கள்:கடலை மாவு - 1 1/2 கப் (அளவு வேண்டும்),
சர்க்கரை, நெய் - தலா 2 கப்,
எண்ணெய் - 1/4 கப்,
முந்திரி, திராட்சை - தலா 10,
கற்கண்டு - 1 டீஸ்பூன்,
ஜிலேபி பவுடர் - 1 சிட்டிகை,
ஏலத்தூள் - சிறிது,
ஜாதிக்காய் - 1/4 துண்டு,
காய்ச்சிய பால் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில், சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்ததும் பால் விடவும். உடனே அழுக்கு ஏடு ஏடாகப் படிந்து வரும். அதனைக் கரண்டியால் எடுத்து ஜிலேபி பவுடர் சேர்க்கவும். சர்க்கரைப்பாகு கொதித்ததும் பாகினைக் கையில் தொட்டுப் பார்க்கவும். (ஆள்காட்டி விரல், கட்டை விரலுக்கு இடை யில் பாகு வைத்து பார்த் தால் கம்பி போல் வரும். இதுதான் பதம்).
கம்பிப் பதம் வரும்போது பாகை இறக்கி வைக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்திற்குத் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். வாணலியில் நெய்விட்டு, சிறிது எண்ணெய் விடவும். நெய்யில் முழுவதுமாகச் செய்தால் லட்டு வறவறப்பாக இருக்கும். சிறிது எண்ணெய்விட்டால் லட்டு சாஃப்ட்டாக இருக்கும்.
எண்ணெய் காய்ந்ததும் கடலை மாவை பூந்தி கரண்டியால் விடவும். பூந்தி மொறு மொறுவென்று ஆனதும் (சிவக்கக் கூடாது. நமுத்தும் இருக்கக் கூடாது). வடிதட்டில் வடித்து ஜீராவில் போடவும். பாத்திரத்தில் ஜீரா இருக்கும் வரை பூந்தி செய்து போட்டு நன்றாகக் கலக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போட்டு, ஏலத்தூள், கற்கண்டு சேர்த்துக் கிளறி, அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
அப்பொழுதுதான் ஜீராவில் பூந்தி நன்றாக ஊறி இருக்கும். தேவையெனில், உடைத்த ஜாதிக்காயை (சிறு துண்டு) நெய்யில் வறுத்துப் பொடித்துப் போடலாம். ஜீரணத்திற்கு நல்லது.
பூந்தியில் ஜீரா ஊறியதும் கையில் உருண்டை பிடித்துப் பார்க்கவும். நன்றாக உருட்ட வந்தால், எலுமிச்சை அளவு உருண்டைகளாக அழுத்தி உருட்டவும். சுவையான, ருசியான லட்டு தயார்.
0 comments:
Post a Comment