Ads Header

Pages


29 March 2012

பரோட்டா சால்னா (அசைவம்) சமையல் குறிப்புகள் !

பரோட்டா சால்னா (அசைவம்)

தேவையான பொருட்கள்
கோழி கறி (அல்லது)
ஆட்டுக்கறி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மல்லிக்கீரை - 1 கட்டு
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மல்லித் தூள் - 4 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 4 டீஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ - தலா 1
பட்டை - 1 இஞ்ச்
சிக்கன் க்யூப் - 1/2 க்யூப்
எண்ணெய் - 5 ஸ்பூன்
தண்ணீர் - சுமார் 3/4 லிட்டர்
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை
கறியை சுத்தம் செய்து அத்துடன் பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து புரட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்து, மல்லிக்கீரையை நைஸாக அரிந்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நைஸாக அரிந்து, தக்காளியையும் நைஸாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில்வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ அனைத்தையும் போட்டு வாசம் வந்தவுடன் பச்சை மிளகாய், பாதி வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.
வெங்காயம் முறுக ஆரம்பிக்கும்போது மீதி இஞ்சி பூண்டு விழுது போட்டு தீயாமல் முறுகவிடவும்.
பிறகு மல்லிக்கீரை போட்டு வதக்கி 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டு தாளித்து, உடனே புரட்டி வைத்துள்ள கறி மற்றும் தக்காளி, மீதி வெங்காயத்தை கொட்டி நன்றாக வதக்கி, பிறகு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
கறி பதமாக வெந்தபிறகு கரம் மசாலத்தூள், மீதி 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மீதி உப்பு, தேங்காய் விழுது, சிக்கன் க்யூப், கடலை மாவு அனைத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து வெந்த கறியில் ஊற்றி சிறிது நேரம் மூடிபோட்டு, 2 கொதிவந்தவுடன் இறக்கவும்.
சுவையான பரோட்டா கறிசால்னா தயார்!
=====================================================================
பரோட்டா சிக்கன் குருமா


இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் பரோட்டா குருமா இது. கோழிக்கறி கொண்டு செய்யப்படும் முறை இதையே ஆட்டுக்கறி கொண்டும் செய்யலாம். ஆட்டுக்கறி வேக சற்று நேரம் எடுக்கும் என்பதால், தனியாக கறியை மட்டும் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, பிறகு கோழிக்கறி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடவும். அல்லது குக்கரில் வேக வைக்கும்போது இன்னும் சற்று அதிக நேரம் வேக வைத்து எடுக்கவும். கறி மசாலா செய்முறை ஏற்கனவே இஸ்லாமிய முறை சிக்கன் குழம்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் பார்வையிடவும்.

தேவையானப் பொருட்கள்
கறி - கால் கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தேங்காய் விழுது - கால் கப்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி

அதிகம் எலும்பில்லாத இறைச்சியாக எடுத்து, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஆட்டிறைச்சி என்றால் சிலர் எலும்புக் கறியாக சேர்த்துக் கொள்வர். விருப்பத்திற்கேற்றார்போல் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து கால் கப் எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

ஒரு நிமிடம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

பின்னர் நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், கீறின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறிவிடவும்.

பிறகு அதில் சிக்கனைப் போட்டு பிரட்டி விடவும்.

இப்போது அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.

அதிலேயே கறி மசாலா, மல்லித் தூள், உப்பு போட்டு கலக்கி விடவும். இதனை சிறிது நேரம் வேகவிடவும்.

3 நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி விடவும்.

குக்கரில் வெயிட் போட்டு இரண்டு விசில் வரை வேகவிடவும். கறி வெந்தது பார்த்து இறக்கி சூடாக பரோட்டாவுடன் பரிமாறவும்.
====================================================================
பரோட்டா சால்னா (சைவம்)

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 1/2 கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பௌடர் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்

செய்முறை
பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை நைஸாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, நடுத்தரமான கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
சுமார் 1/2 லிட்டர் தண்ணீரில் மசாலாத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள்,தேங்காய் விழுது, உப்பு, வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பௌடர் அனைத்தையும் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், 1/3 பகுதி வெங்காயம், இஞ்சி பூண்டு, மிளகாய்த்தூள் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளித்து, மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பிறகு கரைத்துவைத்துள்ள கரைசலை ஊற்றி மூடிபோட்டு, கிழங்கு வேகும்வரை வைக்கவும்.
கிழங்கு வெந்தவுடன் சிறிது தண்ணீரில் கடலை மாவை கரைத்து அதில் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது மிக சுலபமான, சுவையான பரோட்டா சால்னா!
=====================================================================

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner