Ads Header

Pages


02 September 2012

ஏலக்காயை மருந்தாகத் தரலாம்.

வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.

வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும்.

விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.

மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.

குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner