Ads Header

Pages


29 April 2013

கர்ப்ப கால உணவுகள்...

கர்ப்ப கால உணவுகள்...
ஆய்வும் - தீர்வும்

'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லிவரும் சங்கதி!
''ஆம், அதுதான் உண்மை... அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், 'டைப் 2 நீரிழிவு, இதய நோய், மன அழுத்தம்’ உள்ளிட்ட பிரச்னைகளும் வருவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சி மூலமாகவும் கண்டறிந்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்... ஆரம்ப நிலையிலேயே நோய்களைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யாக்நி.
அந்த ஆராய்ச்சி குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்த டாக்டர், ''தாய் வழி ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகளை புனே நகரில் 1993-ம் ஆண்டு தொடங்கினோம். என் தலைமையிலான குழு, எண்ணூறுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளைக் கண்காணித்தோம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே இப்பெண்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறைந்த அளவு வைட்டமின் பி-12 மற்றும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்களுடன் இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், இன்சுலின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். இக்குழந்தைகள்... எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளாக, கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண் டோம்.
கர்ப்பிணிகளின் ரத்தத்தில் வைட்டமின் பி-12 அளவை அதிகரித்தும், ஃபோலிக் அமிலத்தின் அளவைக் குறைத்தும் சரிவிகிதத்தில் இருக்கும்படி செய்து பரிசோதித்துப் பார்த்தோம். இந்த ஆராய்ச்சியின் மூலம், குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதை யும்... நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்ததையும் கண்டறிந்தோம்.
இப்படி, 12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பின்னர், 'குழந்தை கருவாவதற்கு முன்னரும், கருவான பின்னரும் தாய் எடுத்துக் கொள்ளும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளே, குழந்தைக்கு எதிர் காலத்தில் நீண்ட கால நோய்கள் பலவும் வராமல் தடுக்கும்!’ என்கிற உண்மையை உறுதிபடுத்திக் கொண்டோம்'' என்று சொன்ன சித்தரஞ்சன் தொடர்ந்தார்...
''தேவைக்கும் குறைவான எடை உள்ள தாய்மார் களுக்குப் பிறக்கும் குழந்தை களின் தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் கொழுப்பு அதிக அளவு மறைந்திருக் கிறது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் தொடர் பான பிரச்னைகள் வரக் காரணமாக இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்தியக் குழந்தைகள் மெலிந்து காணப்பட்டாலும்... கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் சரிவிகித அளவில் இல்லாததுதான் காரணம். கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தை 9 மாதம் வயிற்றில் வளர்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்நாள் இறுதி வரை ஆரோக்கியமாக வாழவும் வழிவகுக்கிறது என்பதை உணர்ந்து சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் 3 கப் பால் அல்லது அதற்கு இணையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் அடர் பச்சை அல்லது மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. 'பால் மூன்று கப் குடித்து விட்டோமே' என்று தண்ணீர் அளவைக் குறைத் துக் கொள்ளக் கூடாது'' என்ற டாக்டர்...
''நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். டாக்டர் மற்றும் இதற்கென உள்ள ஃபிட்னெஸ் ஆலோசகர்களிடம் கலந்து பேசி என்ன மாதிரி யான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்த வழி!'' என்றார் அழுத்தமாக!

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கர்ப்ப காலத்தில் 2 கப்களுக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், வெளிப்புற உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், பேக்கரி உணவுகள், அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம்... இதுபோன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner