Ads Header

Pages


09 June 2012

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்... டிப்ஸ்!

டிப்ஸ்! பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்...

விருந்தாளிகளுக்கு டீ, காபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போது, கப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீ, காபி தளும்பி சிந்தாது.

மெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோ, குழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டு, உடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது.

இட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, இந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால், இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி! இதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்து, பக்கோடாக்களாகவும் பொரிக்கலாம்.

தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதா? ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.

பட்டு, காட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான், அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டு, உடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்!

அப்ளிகேஷன் ஃபார்ம், முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன், இரு நகல்கள் எடுத்து, ஒன்றில் பூர்த்தி செய்து, அதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால், அடித்தல் திருத்தல், பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம்.

கிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா? அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம்.

வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

வளையல்கள் குவிந்து கிடக்கின்றன... அவற்றை அடுக்கி வைக்க "ஸ்டாண்ட்" இல்லையே என்ற கவலையா? வீட்டில் இருக்கும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால், செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி!

கட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்கள். படுக்கப் போகும் முன், கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே!

இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.

பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner