Ads Header

Pages


08 May 2013

மூட்டு வலியை விரட்ட...

மூட்டு வலியை விரட்ட.

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.

எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.
பாதுகாப்பு முறை
விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம். முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும்.
பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார் எலும்பு மருத்துவ சிகிச்சை நிபுணர் பிரேம்நாத்.
பாட்டி வைத்தியம்
1) அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.
2) அவுரி இலையை, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி குணமாகும்.
3) உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து தடவினால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாகும்.
4) ஊமத்தை இலை, அரிசி மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைத்து பற்றுப் போட்டால் வீக்கம் குணமாகும்.
5) கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குணமாகும்.
6) கடுகு 30 கிராம், கோதுமை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம். மூன்றையும் அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பூசினால் வலி குணமாகும்.
7) கடுகு கீரையை அரைத்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி கை, கால்களில் பூசிக் கொண்டால் மூட்டு பிரச்னை தீரும்.
8) கருவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
9) குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வலி குணமாகும்.
ராகி புட்டு:
ராகிமாவுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் கலந்து ஆவியில் வேக வைக்கவும். தேங்காய் துருவல், பாதாம், முந்திரி ஆகியவற்றை வெந்த ராகி மாவின் மேல் தூவவும். நெய்யில் உலர்ந்த திராட்சையை வறுத்து போடவும். இத்துடன் வெல்லப் பாகு தயாரித்து கலந்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கிடைக்கும்.
இறால் பக்கோடா:
200 கிராம் இறாலை சுத்தமாகக் கழுவி, அதனுடன் சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வைக்கவும். பாசிப்பருப்பு மாவு 1/2 கப், கடலை மாவு 1/2 கப், அரிசி மாவு 1/2 கப் ஆகியவற்றைக் கலக்கவும். இந்த கலவையுடன் சோம்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, இஞ்சி பூண்டில் ஊறிய இறால் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து பக்கோடா பதத்தில் பிசையவும். இதை எண்ணெயில் பொறித்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள் கிடைக்கும்.
சோயா சப்பாத்தி:
சோயா 100 கிராம் எடுத்து வெந்நீரில் கழுவி பிழிந்து அரைக்கவும். கோதுமை மாவு ஒரு கப், மைதா ஒரு கப் மாவை சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அரைத்த சோயா, நறுக்கிய பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியின் மேல் பேஸ்ட் போல தடவவும். இப்படியே தோசைக்கல்லில் சப்பாத்தி போல இரண்டு பக்கமும் வேகவைத்தால் போதும். இது கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தது.
டயட்:
எலும்பின் வலிமைக்கு அவசியமாக இருப்பது கால்சியம், பாஸ்பரஸ். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் தேவையான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இல்லாதபோது மூட்டுத் தேய்மானப் பிரச்னை தோன்றும்.பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்னைகள் வரலாம். மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயது மூப்பின் காரணமாக 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டுப் பிரச்னை இருக்கும். வயது அதிகம் ஆகும்போது உடலில் ரத்த உற்பத்தி குறைகிறது. இதனால் எலும்புகள் சத்துக் குறைபாட்டின் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறது. சிறு வயதினர் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு 450 மில்லி கிராம் கால்சியம் கிடைக்க வேண்டும். டீன் ஏஜ் பருவத்தில் 550 மில்லிகிராம் கால்சியம் அவசியம்.
சிறு வயதினருக்கு 800 மில்லிகிராம் பாஸ்பரஸ் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு 1200 மில்லிகிராம் பாஸ்பரஸ் அவசியம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சத்துகள் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் 30 வயதுக்கு மேல் மூட்டுத் தேய்மானப் பிரச்னைக்கு ஆளாக நேரிடும். ராகி, இறால், மீன், சோயாபீன்ஸ், அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பால், பாலாடைக் கட்டி, வெல்லம், சிவப்பு பீன்ஸ், பாசிப்பருப்பு, கேரட், பாதாம், முந்திரி ஆகியவற்றில் இருந்து அதிகளவு கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது என்கிறார் உணவு ஆலோசகர்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner