Ads Header

Pages


04 February 2013

பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள்!

ஏ1N1 என்று சொல்லப்படும் இந்த பன்றிக்காய்ச்சல் கிருமிக்கு இதுவரை நேரடியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

ஆனால் இந்திய மருத்துவத்தில் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது சித்தர்கள் பட்சி தோஷம், பறவை தோஷம் என்று சொல்லி வைத்திருக்கின்றனர்.

மனிதர்களுக்கு, பிற உயிரினங்களிடத்தில் இருந்து பரவும் ஆபத்தான நோய்களை அவர்கள் அப்போதே கண்டு வைத்துள்னர்.

சில இடங்களில் அதிகப்படியான வெயிலும், அரைகுறையான மழையும், மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் நிலவும் காலங்களில் காய்ச்சல் அதிகம் வருவதை நாம் பார்த்திருக்கிறோம். பிற உயிரினங்களின் கிருமிகள், மனித உடலில் தொற்றுவதற்கு இந்தப் பருவம் ஏதுவாக இருக்கிறது.

சளி, இருமல், மூச்சிரைப்பு, தொண்டை கரகரப்பு, வாந்தி, தலைவலி, உடல்வலி, குறைந்த இரத்த அழுத்தம், பேதி இவைகளையே பன்றிக் காய்ச்சலுக்கு அறிகுறிகளாகக் கூறுகின்றனர்.

இந்த நோய் தொற்றினாலே உயிருக்கு ஆபத்து என்ற தற்போதைய அச்சம் சரியானதுதானா...?

நிச்சயமாக இல்லை... ஏற்கனவே வேறு எதாவது ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியிருக்கும்போது, இந்த நோய் எளிதாக தொற்றுகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவரும், பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்புப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்தி யஅரசே அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்த நோயுடன் வந்தவர்கள் அருகில் இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேலும் தொடர்ந்து காய்ச்சல் நீடித்தாலோ சிறப்புப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

மற்றவர்கள் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டு காய்ச்சல் நிற்கும் வரை வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமானது.

லேசான தலைவலி, சளி, இருமல், தொண்டை வறட்சி இவற்றால் தொண்டைப் பகுதியிலுள்ள நீர் குடலில் சிறிது சிறிதாக இறங்கி அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டுபண்ணுகிறது. மேலும் சளியோடு கூடிய காய்ச்சல் இருப்பவர்கள் நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும் போது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு சளிக்காய்ச்சலுக்கும், இருமலுக்கும் மருந்து கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

இந்த பன்றிக் காய்ச்சலுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. மருந்துகள் இல்லை என்று கூறும் வீண் விவாதங்களை நம்பவேண்டாம்.

சித்தர்கள் மனித உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் மருந்து கூறியுள்ளனர். போலியாக பகட்டு விளம்பரம் செய்யும் மருத்துவர்களை நம்பி ஏமாறாமல் நல்ல படித்துப் பட்டம் பெற்ற அல்லது பாரம்பரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுங்கள். காய்ச்சலுக்கு மருந்தில்லை என்ற பீதியை புறம் தள்ளுங்கள்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும், உடனடி சிகிச்சையாக கீழே குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

வெற்றிலை - 2
கற்பூரவல்லி - 2
துளசி இலை -2
நல்ல மிளகு - 5
இவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பின்னர் காய்ச்சல் குணமாகும் வரை

சுக்கு - 3 கிராம்
மிளகு - 3 கிராம்
திப்பிலி - 3 கிராம்
சித்தரத்தை - 3 கிராம்
குறுந்தட்டி - 3 கிராம்
நறுக்குமூலம் - 3 கிராம்
அதிமதுரம் - 3 கிராம்
சடமாஞ்சி - 3கிராம்

இவை ஒரு வேளைக்கான அளவு

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர, காய்ச்சல் முழுமையாக குணமடையும். அல்லது

சுக்கு - 1 துண்டு
மல்லி விதை - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்

இவைகளை நன்றாக இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும்.

குடிநீரில் சீரகம், ராமிச்சம் வேர் (வெட்டிவேரில் ஒரு வகை) துளசி, மிளகு (லிட்டருக்கு 2 அல்லது 3 மட்டும்) போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி பயன்படுத்தி வந்தால் இந்த நோய் எளிதில் தொற்றாது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

பூமி குளிர மழை பெய்து, வளி மண்டலத்தில் பரவி இருக்கும் கிருமிகள் மண்ணில் ஒடுங்கும்போது, இதுபோன்ற காய்ச்சல் நோய்கள் தாமாக மறைந்துவிடும். எனவே மக்கள் இது குறித்து மரண பயம் கொள்ளத் தேவையில்லை.

சீதளத்தைக் குறைத்து சளியைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சளியைக் கட்டுப்படுத்தாமல் இதுபோன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்க முடியாது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவத்தில் சளியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளம் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல் நோய் வருவதற்கு முன்பு ( prevention) மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொள்ளுதல்,

· தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடும் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.

· அவ்வப்போது சமைத்த சூடான உணவை மட்டுமே உட்கொள்ளுதல்.

· கைகளை அவ்வப்போது சோப்பு நீரால் கழுவுதல்.

· உள் மற்றும் வெளி ஆடைகளை சுத்தமாகப் பேணுதல்.

· கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்.

· பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து 1 மீட்டர் தூரம் விலகியே இருக்கவேண்டும். இந்த விதமான நோய்கள் பரவும் காலங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கும் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கும் செல்வதை தவிர்ப்பது நல்லது.

· சுத்தமான, கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை அதிகமாக குடித்தல்.

· பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்.

ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைப்பிடித்து வந்தால் பன்றிக் காய்ச்சல் உங்கள் பக்கத்தில் கூட வராது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் என்பதே சுகாதாரத்திற்கான தாரக மந்திரம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner